தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட, பாளை ரோட்டிலுள்ள வ.உ.சி கல்லூரியின் முன்புறம் உள்ள பகுதியில் பெண்களுக்கென்று பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள பூங்கா, நமக்கு நாமே திட்டம் 2023 - 24 கீழ் ரூ.56 இலட்சம் மதிப்பீட்டில் "தமிழ்ச்சாலை மகளிர் பூங்கா" மற்றும் ரூ. 1.17 கோடி மதிப்பீட்டில் "மாசிலாமணிபுரம் பூங்கா" ஆகியவற்றைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி திறந்து வைத்தார்.
பிங்க் பூங்காவில் சிறப்பு அம்சமாகச் சூரிய ஒளியில் இயங்கக்கூடிய குளிர்சாதன உடற்பயிற்சிக் கூடம், யோகா பயிற்சிக் கூடம், இறகு பந்து மைதானம், டென்னிஸ் மைதானம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
/indian-express-tamil/media/post_attachments/db2c35ec-2f3.jpg)
இந்நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி; இது பிரத்யேகமாகப் பெண்களுக்கான பூங்கா. இங்கே எந்த ஒரு அச்சுறுத்தலும் இல்லாமல், ஒரு வசதியான மண்டலம் (Comfort Zone) முழுவதுமாக பெண்களுக்காகப் பெண்கள் மட்டும் இருக்கக்கூடிய ஒரு இடம். உங்களுடைய ஆரோக்கியத்தை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய ஒரு இடமாக இப்பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. நீங்கள் மட்டுமல்லாமல் உங்களுடைய அம்மா, பெரியவர்களைக் கூட்டி வந்து இந்த பூங்காவைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இதேபோல விரைவில், மகளிருக்கான இன்னொரு பூங்கா தூத்துக்குடியில் துவங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெண்களுக்கு கேக் தயாரிப்பு பயிற்சி, எம்பிராய்டரி ஒர்க், ஆரி ஒர்க் உள்ளிட்ட சுய மேப்பாட்டிற்கு வழிவகுக்கும் வகையிலான திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது. அதையும் தாண்டி கராத்தே, சிலம்பம் உள்ளிட்ட வீர விளையாட்டுகளை கற்றுக்கொள்ள முன் வரவேண்டும்.
/indian-express-tamil/media/post_attachments/89fbe72f-2a6.jpg)
இங்கே பெண்கள் மகிழ்ச்சியாகப் பல விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு அற்புதமான இடமிது. இந்த இடத்தை முடிந்தவரை ஆக்கப்பூர்வமாக நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். மகளிருக்கான பூங்காவை உருவாக்கித் தந்த தூத்துக்குடி மாநகராட்சிக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
இந்த விழாவில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், சமூகநலம் - மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன், தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் ஜென்னிட்டா, மண்டல தலைவர் அன்னலட்சுமி, தூத்துக்குடி மாநகர தி.மு.க செயலாளர் ஆனந்த சேகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“