/indian-express-tamil/media/media_files/2025/06/08/Rkc6K7zdJtEkhZTbLjMF.jpg)
நைட் அடிக்கடி யூரின் போறீங்களா? சுகர் மட்டுமல்ல இந்த காரணம் கூட இருக்கலாம்; டாக்டர் விஜி
இரவு முழுவதும் நிம்மதியான உறக்கம். அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வால், தூக்கம் கலைந்து அவதிப்படுபவர்கள் நம்மில் பலர். இரவில் அடிக்கடி சிறுநீர் வருவதற்கு சர்க்கரை நோய் காரணம் என்று பரவலாக நம்பப்பட்டாலும், அது மட்டுமே காரணம் அல்ல. வேறு பல உடல்நல மற்றும் உளவியல் காரணங்களும் இதற்குப் பின்னால் இருக்கின்றன என்கிறார் டாக்டர் விஜி.
1. தண்ணீர் அருந்தும் பழக்கம்
நமது அன்றாட பழக்கவழக்கங்களே சில சமயங்களில் நமக்கு எதிராகத் திரும்பும். குறிப்பாக, இரவு 7 மணிக்கு மேல் அதிக அளவில் தண்ணீர் அருந்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு, இரவில் சிறுநீர்ப்பை நிரம்பி அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியநிலை ஏற்படும். பொதுவான மற்றும் எளிதில் சரிசெய்யக்கூடிய காரணமாகும்.
2. தூக்கமின்மையின் தாக்கம்
தூக்கமின்மைக்கும், அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கும் நேரடித் தொடர்பு உண்டு. உங்களுக்கு சரியாகத் தூக்கம் வரவில்லை என்றால், உங்கள் சிறுநீர்ப்பை (Bladder) மிக சுறுசுறுப்பாக (Active) இயங்கத் தொடங்கும். இதனால், நீங்கள் தூங்க முயற்சிக்கும் ஒவ்வொரு முறையும், சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டு, தூக்கம் மேலும் தடைபடும்.
3. ஆண்களுக்கு ப்ராஸ்டேட் வீக்கம்
ஆண்களைப் பொறுத்தவரை, வயதாகும்போது ஏற்படும் "ப்ராஸ்ட்ரோமெகாலி" (Prostatomegaly) எனப்படும் புராஸ்டேட் சுரப்பி வீக்கம், இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கான முக்கியக் காரணமாகும். வீக்கமடைந்த புராஸ்டேட் சுரப்பி, சிறுநீர்ப்பையை அழுத்துவதால் இந்த நிலை ஏற்படுகிறது.
4. பெண்களுக்கு கருப்பை இறக்கம்
பெண்களுக்கு, ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு அல்லது பிரசவத்திற்குப் பின் "கருப்பை இறக்கம்" (Uterine Prolapse) ஏற்பட வாய்ப்புள்ளது. கருப்பை அதன் இயல்பான நிலையில் இருந்து கீழே இறங்குவதால், சிறுநீர்ப்பையில் ஒருவித அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதன் விளைவாக, அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு தூண்டப்படுகிறது.
5. உளவியல் காரணம்
"எப்ப பார்த்தாலும் எதையாவது யோசிச்சுக்கிட்டே இருப்பாங்க" என்று சொல்வதைக் கேட்டிருப்போம். இந்த அதிகப்படியான சிந்தனை மற்றும் மன அழுத்தம் கூட உங்கள் சிறுநீர்ப்பையைத் தூண்டக்கூடும். மனம் ஓய்வில்லாமல் சிந்திக்கும்போது, உடல் ஒருவித பதற்ற நிலையிலேயே இருக்கும். இது சிறுநீர்ப்பையின் செயல்பாட்டையும் பாதித்து, இரவில் உங்களை ஓய்வெடுக்க விடாமல் செய்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.