பெரும்பாலான சர்க்கரை நோயாளிகளுக்கு, சர்க்கரை அளவு அதிகரிப்பது மாலை நேரத்திற்கு பின்னர் தான் என மருத்துவர் அருண் கார்த்திக் கூறுகிறார். மாலை எடுத்துக் கொள்ளப்படும் சிற்றுண்டி மற்றும் இரவு தாமதமாக சாப்பிடுவது இதற்கு முக்கிய காரணமாக அமைகிறது.
சர்க்கரை நோயாளிகள், இரவு உணவு சாப்பிடும் நேரம் மிக முக்கியம். எனவே, 6 முதல் 7 மணிக்குள் இரவு உணவை அவசியம் சாப்பிட்டு முடிக்க வேண்டும். இது செரிமானத்திற்கும், சர்க்கரையை கட்டுப்படுத்துவதற்கும் உதவியாக இருக்கும்.
சராசரியாக 400 - 500 கலோரிகள் இருப்பதை சரியான இரவு உணவு எனக் கூறுவார்கள். 40 சதவீத கார்போஹைட்ரேட், 30 சதவீத ஃபேட் மற்றும் 30 சதவீத புரதம் நிறைந்ததாக இரவு உணவு இருக்க வேண்டும்.
இதற்கு ஏற்ற வகையில் இரவு நேரத்தில் அடை தோசை சாப்பிடலாம். இதில் பயிர் வகைகள் இருப்பதால் நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து கிடைத்து விடும். இல்லையென்றால், இரவு நேரத்தில் சுண்டல் மட்டும் சாப்பிட்டால் உடலுக்கு மேலும் நல்லதாக அமையும்.
எனினும், இவை அனைத்திற்கும் மேலான உணவாக பார்லி கஞ்சி விளங்குகிறது. பார்லி கஞ்சியை தவிர வேறு விதமான கஞ்சிகளை சாப்பிட வேண்டாம் என மருத்துவர் அருண் கார்த்திக் பரிந்துரைக்கிறார். ஏனெனில், பார்லி கஞ்சியில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதுடன், இவை இரத்தத்தில் சர்க்கரை அளவை வேகமாக உயர்த்தாது. இத்துடன் ஒரு முட்டை எடுத்துக் கொண்டால் புரதச்சத்தும் எளிதாக கிடைத்து விடும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.