கேன்சர் நோயால் அண்மை காலங்களில் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். முன்பு அரிதாக சிலரை மட்டுமே தாக்கிய கேன்சர் நோய், தற்போது வயது பேதமின்றி பலருக்கு ஏற்படுகிறது. இதற்கு வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் உணவு முறை மாற்றம் என காரணங்கள் இருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இந்த சூழலில், புடவை கட்டினால் கேன்சர் ஏற்படுமா என சில செய்திகள் ஊடகங்களில் பரவியது. இச்செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது இந்திய கலாசாரத்தில் குறிப்பாக தென் மாநிலங்களில் பெருவாரியான பெண்கள் இன்றளவும் புடவை கட்டுகின்றனர். அந்த வகையில், புடவை கட்டினால் கேன்சர் ஏற்படுமா என பரவிய செய்தி பலரை கலக்கமடையச் செய்தது.
இந்நிலையில், இச்செய்தியில் இருக்கும் உண்மைத் தன்மை குறித்து மருத்துவர் அருண் குமார் விளக்கமளித்துள்ளார். அதன்படி, கேன்சர் என்பது க்ரானிக் இன்ஃப்ளமேஷனால் உருவாகும். நாள்பட்ட காயம் இருக்கும் போது கேன்சர் உருவாக வாய்ப்புள்ளது.
உதாரணமாக புகையிலை உட்கொள்பவர்களுக்கு வாயில் கேன்சர் ஏற்படும். அதேபோல், புகைப்பிடிப்பதால் நுரையீரலில் கேன்சர் உருவாகும். மேலும், உணவுக் குழாயில் நெடுநாட்களாக புண் இருந்தால் கேன்சர் வரும் வாய்ப்பு இருப்பதாக அருண் குமார் கூறுகிறார்.
புடவை, வேட்டி போன்ற ஆடைகளை இடுப்பைச் சுற்றி மிக இறுக்கமாக அணிவதால், அப்பகுதியில் இருக்கும் தோலின் தன்மை சிலருக்கு மாறுபட்டு காட்சியளிக்கும். அந்த இடத்தில் ஒருவேளை புண் ஏற்பட்டு அதனை நீண்ட நாட்களாக கவனிக்காமல் இருந்தால், மார்ஜுலின் அல்சர் உருவாக வாய்ப்பு இருக்கிறது. இது ஒரு வகையான ஸ்குவாமஸ் செல் கார்சினோமா என அருண் குமார் தெரிவித்துள்ளார். இந்த வகையான கேன்சர் அப்பகுதில் வருவதற்கு மிக அரிதான சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் அருண் குமார் விளக்கம் அளித்துள்ளார்.
ஆனால், புடவை கட்டினாலே கேன்சர் வரும் என பரவும் செய்தியைக் கண்டு யாரும் அச்சப்பட தேவையில்லை என அருண் குமார் குறிப்பிட்டுள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.