ஏற்கனவே, சமைத்த நூடுல்ஸை மீண்டும் எண்ணெய்யில் பொறித்து, அவை கெட்டுப்போகாமல் இருப்பதற்காக டிஹைட்ரேட் செய்து, அதனை பாக்கெட்டுகளில் அடைத்து விற்கின்றனர். இத்துடன் சேர்த்து கொடுக்கப்படும் மசாலாவை பயன்படுத்தி நமக்கு தேவைப்படும் நேரத்தில், சுடு தண்ணீரில் போட்டு சமைத்து சாப்பிடலாம். இதனையே இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் எனக் கூறுவார்கள். இதனை சாப்பிடுவதால் உடல் நலனுக்கு பாதிப்பு ஏற்படும் என பலர் கூறுகின்றனர்.
அதன்படி, இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து மருத்துவர் அருண் குமார் விளக்கம் அளித்துள்ளார். 100 கிராம் இன்ஸ்டன்ட் நூடுல்ஸில் 60 கிராம் மாவுச்சத்து, 8 கிராம் புரதம், 12 கிராம் கொழுப்பு ஆகியவை இருக்கிறது என அருண் குமார் கூறுகிறார். மேலும், ஒரு பாக்கெட் இன்ஸ்டன்ட் நூடுல்ஸில் ஏறத்தாழ 1 கிராம் சோடியம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் ஒரு நாளில் தேவைப்படும் உப்புச் சத்தில், 30 சதவீதம் கிடைத்து விடுகிறது.
எந்த ஒரு உணவாக இருந்தாலும் அதில் எவ்வளவு மாவுச் சத்து இருக்கிறது என்பதும், அத்துடன் புரதம், நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை நாம் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதும் முக்கியம் என மருத்துவர் அருண் குமார் கூறியுள்ளார். அதன்படி, தினசரி ஒன்று அல்லது இரண்டு பாக்கெட் நூடுல்ஸ் சாப்பிட்டு எந்த வேலையும் பார்க்காமல் இருந்தால் அதில் இருக்கும் மாவுச் சத்து உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.
மைதா, ஆட்டா, மில்லட் நூடுல்ஸ் என எதுவாக இருந்தாலும் அதில் இருக்கக் கூடிய மாவுச்சத்தின் அளவு அதிகமாகவே காணப்படுகிறது. எனவே, நூடுல்ஸை அரிதாக குழந்தைகளுக்கு கொடுப்பது பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால், அத்துடன் முட்டை, சிக்கன் போன்ற புரதம் நிறைந்த உணவுகள் மற்றும் 50 கிராம் காய்கறிகளையும் சேர்த்து கொடுக்க வேண்டும் என அருண் குமார் அறிவுறுத்துகிறார்.
அடிக்கடி நூடுல்ஸை அப்படியே சமைத்து சாப்பிட்டால் அவை உடல் நலனில் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.