இளம் வயதில் முடி நரைப்பது குறித்து பலரும் கவலை கொள்கின்றனர். முடி நரைப்பதற்கான காரணங்கள் மற்றும் அவற்றை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து மருத்துவர் அருண் குமார் பகிர்ந்து கொண்டார்.
முடி நரைத்தல் மனிதர்களுக்கு இயற்கையாக நடக்கக் கூடிய நிகழ்வு. இதை கேனட்டீஸ் எனக் கூறுவார்கள். 50 வயதில், 50 சதவீத மக்களுக்கு, 50 சதவீத முடி நரைத்து விடும் எனக் கூறப்படுகிறது. இதை தவிர்த்து இளம் வயதிலும் பலருக்கு முடி நரைத்து விடுகிறது.
நம் ஊரில் 25 வயதிற்கு முன்பாக 10 சதவீத முடிகள் நரைத்து விட்டால், இளம் நரை எனக் கூறுவார்கள். வயதான பின்பு முடி நரைத்தால் அதனை நோய் எனக் கருத மாட்டார்கள்.
மெலனின் காரணமாக முடிகளுக்கு நிறம் கிடைக்கிறது. பெரும்பாலும் மரபணு காரணமாக இளம் நரை உருவாகிறது எனக் கூறப்படுகிறது. தைராயிட் ஹார்மோன் குறைபாடுகள் இருப்பவர்களுக்கு இளம் நரை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, தைராயிட் பிரச்சனையை சரி செய்வதன் மூலம் இதனை சீரமைக்க முடியும்.
இரண்டாவதாக பி12 சத்து குறைபாடு காரணமாக இளம் நரை ஏற்படலாம். எனவே, அதற்கு ஏற்றவாறு மருந்துகள், உணவுகள் எடுத்துக் கொண்டால் இளம் நரையை சரி செய்ய முடியும்.
ஃபோலிக் ஆசிட் குறைபாடு காரணமாகவும் இளம் நரை ஏற்பட வாய்ப்புள்ளது. இதேபோல், இரும்பு சத்து, சின்க், செலினியம் சத்து குறைபாடுகளாலும் இளம் நரை உருவாகலாம்.
ஆனால், மரபணு ரீதியாக இளம் நரை ஏற்பட்டால் அதற்கென சிகிச்சைகள் கிடையாது. பி12 சத்து குறைபாடு இருந்தால், வாரத்தில் 50 - 100 கிராம் வரை ஈரல் எடுத்துக் கொள்ளலாம். இதில் இருந்தே செலினியம் போன்ற சத்துகளும் கிடைத்து விடும். பச்சைக் கீரைகள், காய்கறிகள் சாப்பிடுவதால் ஃபோலிக் ஆசிட் கிடைத்துவிடும் என மருத்துவர் அருண் குமார் தெரிவித்துள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“