/indian-express-tamil/media/media_files/2025/02/19/Bw3jiEGRJvYUJ54GGtVQ.jpg)
ஏ.சி என்பது இப்போது பலரது வீட்டிலும் இருக்கக் கூடிய பொருளாக மாறி வருகிறது. மேலும், ஏ.சி தேவைப்படாத பொதுமக்களைக் கூட, பல்வேறு ஆஃபர்கள் கொடுத்து அதனை வாங்க வைக்க வேண்டும் என்கிற வேலையை நிறைய கடைகள் பார்த்து வருகின்றன. ஆனால், ஆரோக்கியத்தை கருத்திற்கொண்டு ஏ.சி பயன்படுத்தக் கூடாது என்றும் சிலர் கூறுவது உண்டு.
அதற்கான விடையை மருத்துவர் அருண் குமார் தெரிவித்துள்ளார். அதன்படி, ஏ.சி-யை யாரெல்லாம் பயன்படுத்தக் கூடாது என பல்வேறு ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். சாதாரணமாக அறையில் இருக்கும் ஈரப்பதத்தை ஏ.சி குறைப்பதாக மருத்துவர் அருண் குமார் கூறுகிறார். அதனால், சளி பிரச்சனை இருப்பவர்கள், ஒவ்வாமை தொற்று இருப்பவர்கள் ஏ.சி-யை பயன்படுத்தினால் மூக்கடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
மேலும், ஈரப்பதம் குறைவதன் காரணமாக கண்ணெரிச்சல் பிரச்சனையும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதேபோல், ஏ.சி அறையில் உறங்கும் போது ஜன்னலை மூடி விடுவோம். இதனால் வெளிக்காற்று வருவதற்கும் வாய்ப்பில்லை. அந்த சமயத்தில் அறையில் இருக்கும் ஒருவருக்கு சளி பிடித்திருந்தால் அல்லது வேறு ஏதேனும் தொற்று இருந்தால், அது மற்றவர்களுக்கு எளிதாக பரவி விடும். எனவே, சளி பிரச்சனை இருப்பவர்கள் ஏ.சி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
மேலும், சருமம் வறட்சியாக இருப்பவர்களும் கூடுமானவரை ஏ.சி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏ.சி அறையை பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டால் சருமத்திற்கு ஈரப்பதம் கொடுக்கும் லோஷன்களை பயன்படுத்தலாம் என மருத்துவர் அருண் குமார் பரிந்துரைக்கிறார். குறிப்பாக, ஏ.சி-யில் இருந்து வெளிப்படும் காற்றை நாம் நேரடியாக சுவாசிக்கும் படி உறங்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.