சிக்கன் சாப்பிட்டால் சூடு பிடிக்கும் என நினைத்து அதனை பலர் ஒதுக்கி வைக்கின்றனர். ஆனால், சிக்கனில் புரதம் இருப்பதனால் அதை அவசியம் சாப்பிட வேண்டும் என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், சிக்கன் சாப்பிட்டால் உடலில் உஷ்ணம் அதிகரிக்குமா என்றும், சிக்கனை எப்படி சாப்பிட வேண்டும் என்றும் மருத்துவர் அருண் குமார் விளக்கம் அளித்துள்ளார்.
உடலில் உஷ்ணத்தை அதிகரிக்கும் தன்மை சிக்கனுக்கு கிடையாது என மருத்துவர் அருண் குமார் தெரிவித்துள்ளார். அந்த காலத்தில் நம் உடலுக்கு உஷ்ணத்தை ஏற்படுத்துவதை சூடு எனக் கூறி மக்கள் ஒதுக்கி வைத்தனர். உதாரணமாக காய்ச்சல், சிறுநீரக தொற்று, மலச்சிக்கல் ஏற்படுத்தும் உணவுகளை சூடு எனக் கூறினர்.
சிக்கனில் புரதம் அதிகமாகவும், கொழுப்பு குறைந்த அளவிலும் காணப்படுகிறது. இதனால் சிக்கன் சாப்பிடும் போது அதற்கு ஏற்றார் போல் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர் அருண் குமார் அறிவுறுத்துகிறார். நார்ச்சத்து இல்லாமல் சிக்கன் மட்டுமே சாப்பிடும் போது தான் மலச்சிக்கல் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக அவர் கூறுகிறார்.
நம் ஊரில் பெரும்பாலும் சிக்கன் சமைக்கும் போது அதிகப்படியான மசாலாக்கள் சேர்த்து, காய்கறிகள் இல்லாமல் சாப்பிடுகிறோம். இந்த காரணத்தினால் தான் வயிற்றில் எரிச்சல் மற்றும் உபாதைகள் உருவாகிறது. இதைத் தான் சூடு பிடித்து விட்டதாக நாம் கருதுகிறோம்.
எனவே, சிக்கன் சாப்பிடும் போது அதற்கு சமமாக காய்கறிகளையும் சாப்பிட வேண்டும். சுமார் 250 கிராம் சிக்கன் சாப்பிடுகிறோம் என்றால், குறைந்தபட்சம் 200 கிராம் அளவிற்காவது காய்கறிகள் சாப்பிட வேண்டும் என மருத்துவர் அருண் குமார் பரிந்துரைத்துள்ளார். இப்படி சாப்பிடும் போது உடலுக்கு பாதிப்பு வராது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.