சரியாக தூக்கம் இல்லாமல் இருந்தால் கண்களைச் சுற்றி கருவளையம் உருவாகும் என பல நாட்களாக கூறி வருகின்றனர். உண்மையில் கருவளையம் ஏற்படுவதற்கு தூக்கமின்மை தான் காரணமா? அல்லது அறிவியல் ரீதியாக வேறு காரணங்கள் இருக்கிறதா என்பது குறித்து மருத்துவர் அருண் குமார் விளக்கம் அளித்துள்ளார்.
பிரேசிலில் இது குறித்து ஒரு ஆராய்ச்சி நடத்தப்பட்டதாக மருத்துவர் அருண் குமார் கூறுகிறார். அதில், தற்காலிக கருவளையம் மற்றும் நிரந்தர கருவளையம் என இரண்டு பிரிவுகளாக மக்களை பிரித்து ஆய்வு செய்துள்ளனர்.
இதில், தற்காலிக கருவளையத்தை பெரிதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை எனக் கூறியுள்ளனர். மேலும், அதனை சோர்வு எனக் குறிப்பிட்டு ஓய்வு மற்றும் சரியாக தண்ணீர் குடித்தால் அவை சரியாகி விடும் எனக் கண்டறிந்துள்ளனர்.
ஆனால், நிரந்தரமாக கருவளையம் இருப்பவர்களிடம் ஆய்வு செய்ததில் சில உண்மைகள் தெரிய வந்ததாக மருத்துவர் அருண் குமார் கூறுகிறார். அதன்படி, சருமத்தின் நிறத்தை தீர்மானிப்பது மெலனின் என்ற பிக்மெண்ட் தான். அந்த மெலனின், கண்களைச் சுற்றியுள்ள சருமத்தில் அதிகமாக படிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தூக்கமின்மைக்கும் நிரந்தரமாக கருவளையம் இருப்பதற்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என ஆய்வு முடிவில் கண்டறியப்பட்டதாக மருத்துவர் அருண் குமார் தெரிவித்துள்ளார். எனவே, இது போன்ற கருவளையத்திற்கு இரத்த சோகை, ஒவ்வாமை மற்றும் மரபியல் ரீதியான காரணங்கள் இருப்பதும் தெரிய வருகிறது. இரத்த சோகை, ஒவ்வாமை இருப்பவர்களுக்கு மருந்துகள் மூலமாக கருவளையத்தை கட்டுப்படுத்த முடியும் எனக் கூறும் மருத்துவர் அருண் குமார், மரபியல் ரீதியாக இவை இருந்தால் மருத்துவர்களை அணுகி ஆலோசனை மேற்கொள்ளலாம் என அறிவுறுத்தியுள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.