அரிசி சாதத்தை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிட்டால் ரெசிஸ்டன்ட் ஸ்டார்ச் உருவாகும். இது வயிற்றில் ஜீரணம் செய்ய முடியாத மாவுச் சத்தாக மாறுகிறது. இதனால் சர்க்கரை நோயாளிகளுக்கு சுகரின் அளவு குறைவதாக தற்போது தகவல் பரவி வருகிறது. இதில் இருக்கும் உண்மை தன்மை குறித்து மருத்துவர் அருண் குமார் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக நேச்சர் எனப்படும் உயர்தர ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். டைப் 1 டையபட்டீஸ் நோயாளிகளை இரண்டு பிரிவுகளாக பிரித்து இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதில், ஒரு பிரிவினருக்கு 200 கிராம் சூடான சாப்பாடு கொடுத்துள்ளனர். மற்றொரு பிரிவினருக்கு 24 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து மீண்டும் சூடுபடுத்திய 200 கிராம் சாப்பாடு கொடுத்துள்ளனர்.
இதில் சூடான சாப்பாடு சாப்பிட்டவர்களுக்கு சர்க்கரை அளவு சராசரியாக 2 மணி நேரத்தில் 200 மில்லி கிராம் அளவிற்கு உயர்ந்துள்ளது. மறுபுறம், ஃப்ரிட்ஜில் வைத்து மீண்டும் சூடுபடுத்திய உணவை சாப்பிட்டவர்களுக்கு சராசரியாக 180 மில்லி கிராம் சர்க்கரை அளவு அதிகரித்துள்ளது. இரண்டிற்கும் இடையே 10 சதவீதம் வித்தியாசம் இருந்தது ஆய்வு முடிவில் கண்டறியப்பட்டது.
ஆனால், இந்த முறைக்கு பதிலாக சாப்பாட்டின் அளவை பாதியாக குறைத்து சூடான உணவை சாப்பிடலாம் என மருத்துவர் அருண் குமார் பரிந்துரைத்துள்ளார். அதன்படி 100 கிராம் சாப்பாடு, முட்டை, காய்கறி அல்லது புரதங்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடலாம் என அவர் தெரிவித்துள்ளார். இப்படி செய்வதன் மூலமும் சர்க்கரை அளவு குறையும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.