இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் உணவு முறை மாற்றம் காரணமாக இவை அதிகரித்துள்ளதாக கூறுகின்றனர். மேலும், இதற்காக ஆயிரக்கணக்காக பணம் செலவளித்து பல மருந்துகள் வாங்குகின்றனர்.
எனினும், இயற்கையான முறையில் இதற்கு தீர்வு காண்பதன் மூலம் பக்கவிளைவுகளை தடுத்துக் கொள்ள முடியும். அதனடிப்படையில், சுண்டைக்காயில் இருக்கும் மருத்துவ குணங்கள் மற்றும் பயன்கள் குறித்து மருத்துவர் ஆஷா லெனின் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார்.
சுண்டைக்காயை மோரில் ஊறவைத்து, அதன் பின்னர் வெயிலில் காய வைத்து பொடியாக்கி சாப்பிடும் பழக்கம் பலரிடம் இருக்கும். ஆனால், இதில் உப்பு சேர்க்காமல் காய வைத்து எடுத்துக் கொள்ளும் போது அதிக நன்மைகள் கிடைக்கும் என மருத்துவர் ஆஷா லெனின் தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு தற்போதைய சூழலில் மாதவிடாய் பிரச்சனை அதிகளவு இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கு சுண்டைக்காய் நல்ல மருந்தாக அமைகிறது என மருத்துவர் ஆஷா லெனின் தெரிவித்துள்ளார். சப்போஜெனின் என்று கூறப்படும் சத்து சுண்டைக்காயில் அதிகமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது பெண்களின் மாதவிடாயை சீராக்க உதவி செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்காக 4 சுண்டைக்காய்களை வாயில் போட்டு மென்றால் மாதவிடாய் சீராக வரும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், சுண்டைக்காயில் இரும்புச் சத்து நிறைந்திருக்கிறது. இது இரத்த சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்ய உதவுகிறது என்று மருத்துவர் ஆஷா லெனின் கூறுகிறார். இதேபோல், செரிமான பிரச்சனைகளுக்கு சுண்டைக்காய்கள் மருந்தாக அமைகிறது.
இவ்வாறு பல பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும் சுண்டைக்காய்களை நம் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் அவற்றின் பயனை முழுமையாக பெறலாம் என மருத்துவர் ஆஷா லெனின் கூறியுள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.