தூங்கி எழுந்ததும் குதிகால் வலி? இது ஆரம்ப அறிகுறி... சரி செய்ய எளிய பயிற்சி: டாக்டர் தனசேகரன்
குதிகால் வலி எதனால் ஏற்படுகிறது என்றும், இதற்கான தீர்வு என்ன என்பது குறித்தும் மருத்துவர் தனசேகரன் விவரித்துள்ளார். அதனை இந்த செய்திக் குறிப்பில் காணலாம்.
உடல் எடை அதிகமானவர்கள், நீண்ட நேரம் வேலை செய்பவர்கள், அதிக நேரம் நின்று கொண்டு பணியாற்றுபவர்கள், புதிதாக உடற்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு குதிகால் வலி ஏற்படும் என மருத்துவர் தனசேகரன் தெரிவித்துள்ளார்.
Advertisment
இந்த பாதிப்பு இருப்பவர்களுக்கு தூங்கி எழுந்ததும் குதிகாலில் கடுமையான வலி ஏற்படும். நீண்ட நேரம் அமர்ந்து இருந்த பின்னர், திடீரென எழுந்து நடக்கும் போது சிலருக்கு குதிகால் வலி இருக்கும். இந்த பிரச்சனையை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது என மருத்துவர் தனசேகரன் அறிவுறுத்துகிறார்.
குதிகால் வலியை சரி செய்வதற்காக சில எளிய பயிற்சிகளையும் மருத்துவர் தனசேகரன் பரிந்துரைக்கிறார். இவற்றை வீட்டில் இருந்தபடியே செய்து கொள்ளலாம். இதற்கு பிரதானமாக மசாஜ் தெரபி செய்யலாம். அதன்படி, வலி ஏற்படும் இடத்தில் ஐஸ் கட்டிகளைக் கொண்டு மசாஜ் செய்யலாம்.
ஒரு தண்ணீர் பாட்டிலை நீண்ட நேரமாக ஃப்ரிட்ஜில் வைத்து விட்டு, பின்னர் அதை பாதங்களில் வைத்து உருட்டினால் வலி சற்று குறையும். காலை நேரத்தில் தூங்கி எழுந்ததும் இந்த பயிற்சியை சுமார் 3 நிமிடங்கள் மேற்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Advertisment
Advertisement
இதேபோல், டென்னிஸ் பந்தையும் கால் பாதத்தில் வைத்து உருட்டலாம். இப்படி அழுத்தம் கொடுக்கும் போது குதிகால் வலி குறையத் தொடங்கும். இதனையும் காலை எழுந்ததும் சுமார் 5 நிமிடங்கள் செய்யலாம் என மருத்துவர் தனசேகரன் கூறுகிறார்.
இதையடுத்து, நமக்கு முன்பாக ஒரு நாற்காலியை வைத்துக் கொண்டு, நுனிகாலை ஊன்றி நிற்க வேண்டும். இப்படி 30 விநாடிகள் நின்று பயிற்சி மேற்கொள்ளலாம். இந்த பயிற்சியை 5 முதல் 10 நிமிடங்கள் செய்து பார்க்கலாம்.
மேலும், நீளமான துணியை கால்களுக்கு அடியில் வைத்துக் கொண்டு, அவற்றை கால் விரல்களால் உள்பக்கமாக இழுக்க வேண்டும். இப்படி செய்தால் சிறிய தசைகளுக்கு அழுத்தம் கிடைக்கும். இதுவும் குதிகால் வலியை கட்டுப்படுத்த உதவும். இது போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளலாம் என மருத்துவர் தனசேகரன் தெரிவித்துள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.