திட்டு திட்டாக தோலில் அழற்சி... காரணம் என்ன? எளிய தீர்வு சொல்லும் டாக்டர் கார்த்திகேயன்
சருமத்தில் திட்டுத் திட்டாக ஏற்படும் அழற்சிக்கான காரணம் குறித்து மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். மேலும், இதற்கு எவ்வாறு தீர்வு காண வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சருமத்தில் திட்டுத் திட்டாக ஏற்படும் அழற்சிக்கான காரணம் குறித்து மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். மேலும், இதற்கு எவ்வாறு தீர்வு காண வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அர்டிகேரியா என்று சொல்லக் கூடிய சரும அழற்சி நோய் தற்போது சிலருக்கு பரவி வருவதாக மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். அந்த வகையில், இவை ஏற்படுவதற்கான காரணங்களை முதலில் அறிந்து கொள்வது அவசியம்.
Advertisment
ஹிஸ்டமைன், லுகோட்ரியன் போன்ற வேதிப்பொருள்கள் இரத்தத்தில் அதிகமாக சுரக்கும் போது, உடலில் அதிகப்படியான அரிப்பு ஏற்படுகிறது என்று மருத்துவர் கார்த்திகேயன் கூறுகிறார். இதற்காக தான், இந்த இரண்டு வேதிப் பொருள்களையும் கட்டுப்படுத்துவதற்கு மருந்துகள் கொடுக்கப்படுகின்றன.
சிலருக்கு இவற்றை எடுத்துக் கொண்ட 24 மணி நேரத்தில் கூட இந்த பாதிப்பு மறைந்து விடுகிறது என்று மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். ஆனால், சிலருக்கு இத்தகைய மருந்துகளை நீண்ட நாட்களுக்கு எடுத்துக் கொள்ளும் நிலை உருவாகிறது என்று அவர் கூறியுள்ளார்.
அர்டிகேரியா என்ற நச்சு அரிப்பு நோயின் காரணமாக சருமத்தில் பல இடங்களில் பூச்சி கடித்ததை போன்று வீக்கம் ஏற்படும். உணவு ஒவ்வாமை இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. பால், தயிர், முட்டை, இறால், கடல் உணவுகள், கடலை வகைகள் மற்றும் சாக்லேட் போன்ற உணவுகள் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும்.
Advertisment
Advertisements
மேலும், செயற்கையாக சேர்க்கப்படும் சுவையூட்டிகள் மற்றும் மனமூட்டிகள் போன்றவை காரணமாகவும் இவை உருவாகும் என்று மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். கொசுக்கடி மற்றும் சிலந்தி பூச்சிக் கடிகள் மூலமாகவும் இவை உருவாகும்.
வெயில் நேரத்தில் வெளியே செல்லும் போது, புற ஊதாக் கதிர்கள் மூலமாகவும் ஒவ்வாமை ஏற்பட்டு அரிப்பு வரும் சாத்தியக் கூறு இருக்கிறது. குளிர் காலத்தில் பனிக்காற்று படும் போது, தோலில் ஏற்படும் வறட்சி காரணமாகவும் அரிப்பு உருவாகும்.
எனவே, எந்த காரணத்தினால் இந்த அரிப்பு உருவாகிறது என்பதை பரிசோதனை செய்ய வேண்டும். உதாரணமாக, சிறுநீர் பரிசோதனை, இரத்தப் பரிசோதனை, மல பரிசோதனை போன்றவை மேற்கொண்டு இதனை கண்டறியலாம்.
இவ்வாறு கண்டறிந்ததும் மருத்துவர்களின் ஆலோசனை பெற்று அதற்கு ஏற்ப மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இது தவிர தளர்வான உடைகளை அணிந்து கொள்ளலாம். குளிர்பானம் அருந்தக் கூடாது. இது தவிர ஒவ்வாமை ஏற்படுத்தும் உணவுகளை தவிர்க்கலாம் என்று மருத்துவர் கார்த்திகேயன் அறிவுறுத்துகிறார்.
நன்றி - Doctor Karthikeyan Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.