/indian-express-tamil/media/media_files/2025/08/26/white-hair-2025-08-26-11-33-24.jpg)
ஒவ்வொரு முறையும் கண்ணாடியில் ஒரு வெள்ளை முடியைப் பார்க்கும் போதும், அதை பிடுங்கவோ அல்லது வெட்டவோ மனம் துடிக்கும். ஆனால், 'ஒரு வெள்ளை முடியை வெட்டினால், பத்து வெள்ளை முடி முளைக்கும்' என்று பலர் சொல்வதைக் கேட்டிருப்போம். இது உண்மையா? என்று டாக்டர். முருகசுந்தரம் ஆதன் ஆரோக்யம் யூடியூப் பக்கத்திற்கு அளித்த பேட்டியில் அறிவியல் பூர்வமான விளக்கத்தை கூறியுள்ளார்.
ஒரு வெள்ளை முடியை வெட்டினாலோ அல்லது பிடுங்கினாலோ, அது மேலும் பல வெள்ளை முடிகளை உருவாக்காது என்று டாக்டர். முருகசுந்தரம் திட்டவட்டமாகத் தெரிவிக்கிறார். இது ஒரு தவறான நம்பிக்கை. ஒவ்வொரு முடியின் வேர்ப்பகுதியும் தனியானது. ஒரு முடியை அகற்றுவது மற்ற முடிகளின் வளர்ச்சி அல்லது நிறத்தை எந்த வகையிலும் பாதிக்காது. எனவே, இனிமேல் தைரியமாக அந்த ஒரு முடியை வெட்டலாம்.
நரைமுடி என்பது வயதானவர்களுக்கு மட்டும் வருவதல்ல. குறிப்பாக, 22 வயதிற்குள் தலைமுடி நரைத்தால் அதை முன்கூட்டிய நரைமுடி (Premature Greying) என்கிறோம். இதற்குப் பல காரணங்கள் உள்ளன:
ஊட்டச்சத்து குறைபாடு: வைட்டமின் பி12, வைட்டமின் டி, இரும்பு மற்றும் கால்சியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் குறைந்தால், முடி நரைக்கத் தொடங்கும்.
மன அழுத்தத்தின் மாயம்: மன அழுத்தம் நமது உடலை மட்டுமல்ல, முடியின் நிறத்தையும் பாதிக்கிறது. இது முடிக்கு நிறம் கொடுக்கும் மெலனோசைட் செல்களை அழித்து, நரைமுடிக்கு வழிவகுக்கும்.
மரபணுவின் விளையாட்டு: உங்கள் பெற்றோர்களுக்கு இளம் வயதிலேயே நரைமுடி வந்திருந்தால், உங்களுக்கும் வர வாய்ப்புகள் அதிகம். இது மரபணுக்களின் தாக்கம்.
நரைமுடியை மறைக்க நாம் நாடும் முதல் தீர்வு ஹேர் கலர்கள். ஆனால், இதில் உள்ள பிபிடி (PPD) என்ற ரசாயனம் மிகவும் ஆபத்தானது. இது 40 வகையான ஒவ்வாமைகளை (allergies) ஏற்படுத்தக்கூடியது. மேலும், சில 'பிபிடி இல்லாத' கலர்களிலும், அதன் துணை ரசாயனங்கள் இருக்கலாம்.
முடிக்கு ரசாயனங்கள் வேண்டாம் என்று நினைப்பவர்கள், மருதாணி, அவுரி, டீ, காபி போன்ற இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தலாம். இவை தலைமுடிக்கு பாதுகாப்பான நிறத்தைக் கொடுக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.