ஈறுகளில் ரத்தக் கசிவு? இந்த சிகிச்சையை மட்டும் எடுங்க: டாக்டர் அட்வைஸ்
ஈறுகளில் இருந்து இரத்தம் கசிவதற்கான காரணம் மற்றும் அவற்றை எப்படி தடுப்பது என்பதற்கான வழிமுறைகளை மருத்துவர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார். அவற்றை தற்போது காணலாம்.
பலரது வாழ்வில் ஒரு முறையாவது பற்களின் ஈறுகளில் இருந்து இரத்தக் கசிவு ஏற்பட்டிருக்கும். இந்த இரத்தக் கசிவுகளுக்கான காரணம் மற்றும் அவற்றை எப்படி தடுப்பது என மருத்துவர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.
Advertisment
ஈறுகளுக்கும், பற்களுக்கும் இடையே இருக்கும் பகுதியில் உணவு பொருட்கள் சிக்கிக் கொள்ளும் போது வீக்கம் உண்டாகும். இதனால் தான் அப்பகுதியில் இருந்து இரத்தம் வருகிறது என மருத்துவர் முத்துக்குமார் கூறுகிறார். இதுவே ஈறுகளில் இருந்து இரத்தக் கசிவு ஏற்படுவதற்கு பிரதானமான காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இது தவிர சிலர் வாய் வழியாக மூச்சு விடுபவர்களாக இருப்பார்கள். அவர்கள் இரவு முழுவதும் தூங்கும் போது இவ்வாறு வாய் வழியாக மூச்சு விட்டால், ஈறுப்பகுதிகளில் ஈரப்பதம் இல்லாமல் போய் விடும். இதனாலும் இரத்தக் கசிவு ஏற்படலாம்.
வைட்டமின் சி குறைபாடு இருப்பவர்களுக்கும், கர்ப்பமாக இருப்பவர்களுக்கும் இது போன்று ஈறுகளில் இருந்து இரத்தக் கசிவு உருவாகும். இதேபோல், சில மருந்துகளினால் ஏற்படும் பக்கவிளைவுகளின் காரணமாகவும் ஈறு வீக்கம் ஏற்பட்டு இரத்தம் கசியும்.
Advertisment
Advertisement
இது போன்ற காரணங்களை நம்மால் தவிர்த்து விட முடியும் என மருத்துவர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார். ஈறுகளில் அழுக்குகள் அதிகமாக இருந்தால், பல் மருத்துவரிடம் சென்று அவற்றை சுத்தப்படுத்திக் கொள்ளலாம் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மருந்து, மாத்திரைகளால் பக்கவிளைவுகளின் மூலமாக ஈறுகளில் இரத்தக் கசிவு ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். வைட்டமின் குறைபாட்டால் இரத்தக் கசிவு ஏற்பட்டால், அதற்கான சத்துகளை அவர்களுக்கு பரிந்துரைக்கலாம்.
ஆனால், வாய் வழியாக மூச்சு விட்டு ஈறுகளில் இருந்து இரத்தக் கசிவு ஏற்பட்டால், அவர்களுக்கு சில சிகிச்சைகள் செய்ய வேண்டும். அதன்படி, க்ளிப் சிகிச்சை அல்லது மையோஃபங்ஷ்னல் சிகிச்சை மேற்கொள்ளலாம். சில சமயங்களில் இ.என்.டி மற்றும் பல் மருத்துவர்கள் சேர்ந்து சிகிச்சைகளை செய்வார்கள்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.