சர்க்கரை நோயாளிகள் சித்த மருத்துவத்தை தேர்ந்தெடுத்து பின்பற்றலாம் என மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். அதன்படி, சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதில் தொடங்கி குணப்படுத்துவது வரை சித்த மருத்துவத்தில் சாத்தியம் என்று அவர் கூறியுள்ளார்.
இதேபோல், மருந்துகள் இன்றி உடற்பயிற்சி மற்றும் உணவு முறை வாயிலாகவும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, சுமார் 35 முதல் 40 வயதிற்குள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அந்த பாதிப்பில் இருந்து மீண்டு வரலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, சிறுதானிய வகைகள் ஆகியவற்றை உணவு வழக்கங்களில் ஏற்படுத்திக் கொள்ளலாம். மேலும், நார்ச்சத்து இருக்கும் காய்கறிகளை அதிகமாக சாப்பிடலாம். ஒரு நாளைக்கு மூன்று வேளைகளிலும் காய்கறிகளை அதிகமாக சாப்பிட வேண்டும்.
இதேபோல், சர்க்கரை அளவை குறைப்பதில் வெண்டைக்காய் முக்கிய இடம் வகிக்கிறது. 4 வெண்டைக் காய்களை நீளவாக்கில் வெட்டி தண்ணீரில் போட்டு விட வேண்டும். இதனுடன் 4 துண்டுகள் பாகற்காய் மற்றும் ஒரு ஸ்பூன் வெந்தயம் சேர்க்க வேண்டும்.
இவற்றை தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்து அடுத்த நாள் காலை, அந்த தண்ணீரை வடிகட்டி குடிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து குடித்து வந்தால் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும் என்று மருத்துவர் நித்யா தெரிவித்தார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.