பல் துலக்கும் போது வாயில் கசப்பு... இந்த பாதிப்புக்கான அறிகுறி; டாக்டர் நித்யா கூறும் எளிய தீர்வு
உடலில் பித்தம் அதிகரிக்கும் போது அவை என்ன மாதிரியான பாதிப்புகளை விளைவிக்கும் என மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். இதற்கான அறிகுறிகளையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உடலில் பித்தம் அதிகரித்தாலோ அல்லது குறைந்தாலோ அவை நோயின் தாக்கத்தை ஏற்படுத்தும் என மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். பித்தம் என்பதை உடல் உஷ்ணம் என எடுத்துக் கொள்ளலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். பித்த நரை, பித்த வெடிப்பு, பித்த வாந்தி போன்ற பிரச்சனைகள் இத்துடன் தொடர்புடையவை.
Advertisment
கல்லீரல் தொடர்பான பாதிப்புகளை நிர்ணயிக்கும் காரணியாக பித்தம் செயல்படுகிறது. பித்தம் அதிகரிக்கும் போது சிலருக்கு கண்கள் மஞ்சளாக காணப்படக் கூடும். உடலின் நடுப்பகுதியில் பித்தத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். சிலருக்கு உச்சந்தலை சூடாக இருக்கும். மேலும் சிலருக்கு வறட்டு இருமல் அடிக்கடி ஏற்படும். ஆனால், இதனை சளி தொல்லை எனக் கருதி அதற்கான மருந்துகளை எடுத்துக் கொள்வார்கள். அப்படி செய்தால் பித்தம் மேலும் அதிகரிக்கும்.
இதன் முக்கிய அறிகுறியாக பலருக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருக்கும். எவ்வளவு தான் நார்ச்சத்து மிகுந்த உணவுகளை எடுத்துக் கொண்டாலும் மலச்சிக்கல் இருக்கிறது என்று சிலர் கூறுவார்கள். ஆனால், பித்தம் காரணமாக மலக்குடலில் வறட்சி தன்மை ஏற்படுவதால் தான் அவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்படுகிறது என மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார்.
இதேபோல், பித்தம் அதிகமாக இருப்பவர்களுக்கு அல்சர் கோளாறும் இருக்கும். சிலருக்கு பல் துலக்கும் போது வாயில் கசப்பான உணர்வு இருக்கும். இதேபோல், வாந்தி எடுக்கும் போது அதீத மஞ்சள் நிறம் அல்லது பச்சை நிறத்தில் காணப்படும். இவையும் பித்தம் அதிகரித்திருப்பதற்கான அறிகுறிகள் தான். அதிக தலைவலி, சருமத்தில் வறட்சி தன்மையும் பித்தத்தால் ஏற்படும்.
Advertisment
Advertisements
இரவில் அதிக நேரம் கண் விழித்து இருத்தல், அதிக காரமான உணவுகள் எடுத்துக் கொள்ளுதல், எண்ணெய்யில் அதிகமாக பொறித்த உணவுகள், அசைவ உணவுகள் அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு பித்தம் நிறைய இருக்கும். இதனை சீரமைப்பதற்கு உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கக் கூடிய காய்கறிகள், கீரை வகைகளை சாப்பிடலாம் என மருத்துவர் நித்யா அறிவுறுத்துகிறார்.