ஈசியா கிடைக்கும் இந்த ஒரு மூலிகை மட்டும் போதும்; டாக்டர் ஷர்மிகாவின் ஸ்கின் கேர் டிப்ஸ்
மருத்துவர் ஷர்மிகா தான் பின்பற்றக் கூடிய சிம்பிளான ஸ்கின் கேர் டிப்ஸ் குறித்து தெரிவித்துள்ளார். இதனை பின்பற்றும் முறை மற்றும் இதன் மூலம் கிடைக்கும் நன்மைகளையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக ஏராளமான சத்து நிறைந்த உணவுகளை கண்டறிந்து சாப்பிடும் வழக்கம் நிறைய பேரிடம் இருக்கும். அந்த வகையில் உடல் ஆரோக்கியம் என்பது சரும பராமரிப்பையும் உள்ளடக்கியது தான். ஆனால், சரும பராமரிப்பில் சிலர் அக்கறை எடுத்துக் கொள்ளாமல் இருப்பார்கள்.
Advertisment
உடலின் ஒவ்வொரு உறுப்புகளும் சீராக இயங்குவது எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு சருமமும் ஆரோக்கியமாக இருத்தல் அவசியம். எனினும், தற்போது இருக்கும் சூழலில் வேலைகள் அனைத்தையும் முடித்து விட்டு, சரும பராமரிப்பில் தனியாக ஈடுபடுவதற்கு நேரம் இல்லை என்றும் சிலர் கூறுகிறார்கள். அதற்காக சரும ஆரோக்கியத்தை கைவிட முடியாது.
அந்த வகையில் ஒரே ஒரு பொருளைக் கொண்டு குறைவான நேரத்தில் நம் சருமத்தை எவ்வாறு பராமரிக்கலாம் என்று மருத்துவர் ஷர்மிகா விளக்கம் அளித்துள்ளார். குறிப்பாக, இதனை நாள்தோறும் தான் பயன்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், எளிதாக கிடைக்கும் மூலிகையான கற்றாழையை இதற்கு பயன்படுத்தலாம்.
கற்றாழையை உபயோகப்படுத்துவதன் மூலம் முகத்தில் இருந்து கருமையை நீக்க முடியும். சருமத்தில் இருக்கும் நீர்ச்சத்தை சீராக வைத்திருக்க கற்றாழை உதவுகிறது. இதேபோல், முகத்தை பொலிவாக வைத்திருக்கவும் கற்றாழையை பயன்படுத்தலாம் என மருத்துவர் ஷர்மிகா தெரிவித்துள்ளார். பாக்டீரியா போன்ற தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கவும் கற்றாழை பயன்படுகிறது.
Advertisment
Advertisements
கற்றாழையில் இருக்கும் ஜெல்லை மட்டும் தனியாக எடுத்து ஏழு முறை தண்ணீரில் நன்றாக கழுவிக் கொள்ளலாம். பின்னர், அந்த ஜெல்லை மிக்ஸியில் அரைத்து முகம் மட்டுமின்றி உடல் முழுவதற்கு கூட பயன்படுத்தலாம் என்று மருத்துவர் ஷர்மிகா தெரிவித்துள்ளார். அந்த அளவிற்கு இதில் மருத்துவ குணங்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், இதை பயன்படுத்துவதற்கு முன்பாக சிறிதளவு மட்டும் எடுத்து கழுத்துப் பகுதியில் லேசாக தடவி விட்டு, ஒவ்வாமை ஏதேனும் ஏற்படுகிறதா என சுயபரிசோதனை செய்து கொள்ளலாம் என்று அவர் அறிவுறுத்துகிறார். மேலும், இதில் குளிர்ச்சித் தன்மை இருப்பதால் மாலை நேரத்திற்கு மேல் பயன்படுத்த வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி - PaleoLife Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.