/indian-express-tamil/media/media_files/2025/04/28/qwTcI4WflC3U9fJajApb.jpg)
இன்றைய சூழலில் ஒவ்வொரு மனிதருக்கும் பிரதானமான விஷயமாக நிறைய இருக்கும். தங்களது தேவைகள் மற்றும் ஆசைக்கு ஏற்ப பல்வேறு கனவுகளுடன் பயணிக்கின்றனர். ஆனால், இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஆரோக்கியமான வாழ்வு என்பது முதன்மையானதாக இருக்க வேண்டும்.
ஏனெனில், நம்முடைய அன்றாட பணிகளை திறம்பட செய்வதில் இருந்து நம் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வது வரை, நம்முடைய ஆரோக்கியத்தை சார்ந்தே இருக்கிறது. அந்த வகையில் குறிப்பிட்ட சில 5 விஷயங்களை தினசரி பின்பற்றுவதன் மூலம் நம்முடைய இலக்கை எளிதாக அடையலாம் என்று மருத்துவர் ஷர்மிகா அறிவுறுத்துகிறார்.
அந்த வகையில், தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று மருத்துவர் ஷர்மிகா கூறுகிறார். குறிப்பாக, நம் தசைகள் மற்றும் எலும்புகளை வலிமையாக்கும் பயிற்சிகளை அவசியம் செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதற்காக வீட்டிலேயே சாதாரணமாக டம்பெல் போன்ற பொருட்களை கொண்டு உடற்பயிற்சி செய்யலாம்.
மேலும், புரதச் சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். வாரம் ஒரு முறை அல்லது மாதம் ஒரு முறை என்று இல்லாமல், ஒவ்வொரு நாளும் புரதச் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது அவசியம். இது நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. எனவே, முட்டை, பருப்பு போன்ற எளிமையான பொருட்களில் இருந்து கூட புரதத்தை எடுத்துக் கொள்ள முடியும்.
அடுத்தபடியாக, கூடுமானவரை தினசரி காலையில் சீக்கிரம் எழுந்து பழக வேண்டும். இவ்வாறு செய்யும் போது அன்றைய நாள் சுறுசுறுப்பாக இருப்பதுடன், நமக்கு நிறைய நேரமும் இருக்கும். இந்த நேரத்தை பயன்படுத்தி நமக்கான விஷயங்களை எளிதாக செய்ய முடியும். ஆரம்பத்தில், இது கடினமாக தோன்றினாலும் அதன் பின்னர் ஒரு பழக்கமாக மாறி விடும்.
தற்போது, பலரும் ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து வேலை பார்க்கும் வகையிலான பணிகளில் இருக்கின்றனர். இதனால், குறைந்தபட்சம் 45 நிமிடங்களாவது தினமும் நடைபயிற்சி செய்ய வேண்டும். இது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், மனதையும் புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும்.
இறுதியாக, நம்முடைய வெளிப்புற தோற்றத்தையும் நேர்த்தியாக வைத்திருக்க வேண்டும். இதற்காக விலை உயர்ந்த ஆடைகள் அணிவது, மேக்கப் போடுவது என்று அர்த்தம் கொள்ள தேவையில்லை. தன்னம்பிக்கையுடன் இருக்கும் போது, நம்முடைய தோற்றமும் நேர்மறையான தாக்கத்தை உருவாக்கும்.
இந்த 5 விஷயங்களை தினசரி பின்பற்றுவதன் மூலம் நம் ஆரோக்கியம் மேம்படுவதுடன், நம்முடைய வாழ்க்கை தரமும் உயரும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
நன்றி - DAISY HOSPITAL Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.