இன்றைய சூழலில் அதிகமாக பேசப்படும் பிரச்சனை இளநரையாக இருக்கிறது. நரை என்பது வயது மூப்பின் அடையாளமாக பார்க்கப்படுவது. சுமார் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முடி நரைக்க தொடங்கினால், வயதாகி விட்டதாக பலருக்கு பயம் ஏற்படுகிறது. ஆனால், சிறுவர்களுக்கே 10, 12 வயதில் சில முடிகள் நரைத்திருப்பதை காண முடிகிறது.
முதலில் நரை முடி குறித்த புரிதல் நம்மிடையே இருக்க வேண்டும் என மருத்துவர் சிவராமன் கூறுகிறார். இந்த காலகட்டத்தில் தலை முடியை அலங்காரம் செய்யும் போக்கு பலரிடம் காணப்படுகிறது. முன்பெல்லாம் திருமணத்தின் போது தான் முடியை அலங்கரித்துக் கொள்வார்கள். தற்போது அடிக்கடி முடி அலங்காரத்தில் பலர் ஈடுபடுகின்றனர்.
இவ்வாறு அடிக்கடி சிகை அலங்காரங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். அதேபோல், தலை முடியை பராமரிப்பதற்கு நமது வாழ்வியலும், உணவு முறையும் மிக முக்கியமானது. உடலில் சூடு உண்டாக்கும் உணவுகளை அடிக்கடி சாப்பிடக் கூடாது என மருத்துவர் சிவராமன் கூறுகிறார். அதன்படி, கோழிக்கறி, எண்ணெய்யில் பொறித்த உணவுகள், ஊறுகாய், சிப்ஸ் ஆகிய உணவுகளை அடிக்கடி சாப்பிடக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.
பழங்கள், கீரைகள் அதிகளவில் சாப்பிட வேண்டும். குறிப்பாக, கரிசலாங்கன்னி கீரையை அவசியம் சாப்பிட வேண்டும். இந்தக் கீரை முடியில் கருமை நிறத்தை கொண்டு வருவதற்கு உதவியாக இருக்கும். கரிசலாங்கன்னி சாறு எடுத்து, அதை தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து தலைக்கு தேய்த்துக் கொள்ளலாம் என்றும் சிவராமன் தெரிவித்துள்ளார்.
நெல்லிக்காயும் நம் உணவில் அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை முடி வளர்ச்சி மட்டுமின்றி சருமம் சுருக்கம் அடைதல் போன்ற பிரச்சனைகளையும் தடுக்கிறது. அதன்படி, நெல்லிக்காயை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை அப்படியே சாப்பிடலாம்.
இவ்வாறு நரை முடியை தடுப்பதற்கான வழிமுறைகளை மருத்துவர் சிவராமன் பரிந்துரைத்துள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“