திரைப்படங்களைக் காண திரையரங்கு செல்பவர்கள் பலரும் நிச்சயம் சில விநாடிகள் தங்களின் கண்களை மூடிக் கொள்வார்கள். காரணம், மது மற்றும் புகைப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் காணொளிகளைக் காண நம்மில் பலருக்கும் மனமிருக்காது. அத்தகைய கடும் பாதிப்புகளை மது ஏற்படுத்துகிறது. அவ்வாறு மதுவினால் ஏற்படும் ஈரல் சுருக்க நோயின் பாதிப்பு குறித்தும், அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரண்டே ஆண்டுகளில் உயிரிழந்து விடுவார்கள் எனவும் மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, இன்றைய இளம் தலைமுறையினரிடையே மது பழக்கம் அதிகரித்ததற்கு திரைப்படங்கள் தான் காரணம் என மருத்துவர் சிவராமன் குற்றஞ்சாட்டியுள்ளார். காதலில் வெற்றி பெற்றவர்கள், தோல்வி கண்டவர்கள், மகிழ்ச்சி, துக்கம் என அனைத்து உணர்வுகளுக்கும் மது துணையாக இருப்பது போன்ற காட்சியமைப்புகள் இளைஞர்களை கவர்வதாக அவர் விமர்சித்துள்ளார். ஒரு காலகட்டம் வரை வெளியான திரைப்படங்களில் மற்ற கதாபாத்திரங்களில் இருந்து கதையின் நாயகனை தனித்து காண்பிப்பதற்காக மது பழக்கம் இல்லாதவன் போன்று கதாபாத்திரம் வடிவமைத்திருப்பார்கள். ஆனால், தற்போதைய படங்களில் கதாநாயகனை அவ்வாறு அடையாளம் காண முடியவில்லை எனவும் பலர் கூறுகின்றனர்.
அண்மையில், சிறிதளவு மதுபானம் எடுத்துக் கொண்டால் உடலுக்கு நல்லது என மருத்துவர்கள் கூறுவது போன்ற ஒரு தகவல் பரவி வருவதாக சிவராமன் சுட்டிக் காட்டினார். யதார்த்தத்தில் மருத்துவர்கள் அவ்வாறு கூறுவதில்லை எனவும், மதுபானத்தில் உள்ள அதுபோன்ற வேதிப் பொருள்கள் கத்திரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளில் கிடைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மது குடிப்பதற்கு ஒரு காரணமாகவே இது போன்ற தகவல்கள் இணையத்தில் உலா வருவதாக அவர் விமர்சித்துள்ளார்.
மேலும், பழங்காலத்தில் கள் குடித்தவர்கள் எல்லோரும் கடுமையான உடல் உழைப்பை மேற்கொண்டவர்கள் எனவும், அதனால் அவர்களுக்கு மிகப்பெரிய அளவில் உடல் பாதிப்புகள் ஏற்படவில்லை எனவும் சிவராமன் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த தலைமுறையினர் உடல் உழைப்பில் அதிகளவில் ஈடுபடாததால் கள் போன்ற பானங்களை உட்கொள்ளுதல் நல்லதல்ல என அவர் வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பாக, மிகக் குறைந்த அளவில் மதுபானம் உட்கொண்டால் கூட நமது உடலில் ஈரல் சுருக்க நோய் வருவதற்கான சாத்தியக் கூறுகள் இருந்தால், நிச்சயம் அந்த நோயின் பாதிப்பு அதிகளவில் இருக்குமென சிவராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதுமட்டுமின்றி ஈரல் சுருக்க நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழ முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மற்ற நபர்களின் ஈரலில் இருந்து சிறிய பகுதியை தானமாக வழங்கினால் கூட 15 விழுக்காடு மட்டுமே உயிர்பிழைக்க வாய்ப்பு இருப்பதாகவும், ஆனால் அதற்கான அறுவை சிகிச்சைக்கு சுமார் ரூ. 45 லட்சம் செலவளிக்க வேண்டுமென சிவராமன் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.