வெகுஜனங்களுக்கு தோல் நோய்களில் மிக எளிதாக பரவக் கூடியது பூஞ்சை தொற்றுகள் தான் என மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். இந்த பூஞ்சை தொற்று பெரும்பாலும், நம் உடலில் சூரிய ஒளி படாத பகுதிகளில் தான் வரும். குறிப்பாக, கை இடுக்குகள், இடுப்பு பகுதிகளில் அதிகமாக வரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனை தேமல் என்று மக்கள் கூறுவார்கள். இதன் மீது சாதாரண ஆயின்மெண்ட் பயன்படுத்தும் போது அவை இரண்டு நாட்களில் சரியாகி விடுவதை போன்று தோன்றும். ஆனால், இந்த மருந்தின் வீரியம் குறைந்த 6 மணி நேரத்தில் அவை மீண்டும் வந்து விடும். எனவே, சில வாழ்க்கை முறை மாற்றங்களை பின்பற்ற வேண்டும் என மருத்துவர் சிவராமன் பரிந்துரைத்துள்ளார்.
அதனடிப்படையில், தினசரி குளிக்கும் போது இடுப்பு பகுதி மற்றும் கை இடுக்கு பகுதிகளை சுத்தமாக்க வேண்டும். வெப்ப நாடுகளில் வசிப்பவர்களுக்கு வியர்வை மற்றும் அழுக்குகளால் இவை அதிகளவு ஏற்படும் என சிவராமன் கூறுகிறார்.
இவ்வாறு குளித்த பின்னர், அந்த பகுதிகளில் ஈரத்தை உலர்த்தி விட்டு, அதற்கு பின்னர் மருந்து போட வேண்டும். சீமையகத்தி என்று ஒரு செடி இருக்கிறது. கொன்றைப் பூ போன்று இவை மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கும். இந்த சீமையகத்தி இலையில் இருந்து சித்த மருத்துவத்தில் ஆயின்மெண்ட் தயாரிக்கப்படும் என சிவராமன் கூறுகிறார்.
இந்த ஆயின்மெண்ட் பயன்படுத்தினால் பூஞ்சை தொற்றை முற்றிலும் அகற்றி விடலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.
அடிக்கடி பூஞ்சை தொற்று பாதிப்பு ஏற்பட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், சர்க்கரை நோயாளிகளுக்கு இவை அடிக்கடி வரும் வாய்ப்பு உள்ளது என மருத்துவர் சிவராமன் கூறுகிறார். உணவில் கசப்பான பொருட்களை சேர்த்துக் கொள்ளுதல், தேவையான அளவு மிளகு எடுத்துக் கொள்வதை பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பின்பற்றலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.