உடல் உஷ்ணத்தை தணிப்பதற்கு முதலில் வாழ்வியல் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். மேலும், அதற்கான சில வழிமுறைகளையும் அவர் பரிந்துரைத்துள்ளார்.
இன்றைய சூழலில் பெரும்பாலானோர் வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே தலைக்கு குளிக்கின்றனர். ஆனால், தினசரி தலைக்கு குளிக்க வேண்டும் என மருத்துவர் சிவராமன் கூறுகிறார். உடலில் உள்ள அழுக்குகளை கழுவுவதற்காகவே குளிப்பதாக பலர் நினைக்கின்றனர்.
இரவு முழுவதும் நம் உடலில் பித்தம் அதிகரித்துக் காணப்படும். இதனை தணிப்பதற்காகவே காலை நேரத்தில் தலைக்கு குளிக்க வேண்டும். மேலும், வாரத்திற்கு ஒரு முறையாவது தலைக்கு நல்லெண்ணெய் வைத்து குளிக்க வேண்டும் என சிவராமன் தெரிவித்துள்ளார். தலைக்கு எண்ணெய் வைத்து குளிப்பது என்பது நாம் பாரம்பரியமாக பின்பற்றுவது.
உணவு பொருட்களை பொறுத்தவரை அதிகம் எண்ணெய் சேர்த்த பொருட்களை சாப்பிடக் கூடாது. இரத்த அழுத்தம், மாரடைப்பு போன்ற பல பிரச்சனைகளுக்கு இவை வழிவகுக்கின்றன. எனினும், கொழுப்புகளை முழுமையாக தவிர்க்க கூடாது என மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
பல வைட்டமின்கள் கொழுப்பில் கரைந்து தான் உடலில் சேர வேண்டும். எனவே, குறைந்த அளவிலான எண்ணெய் பொருட்களை தினசரி பயன்படுத்தலாம். எண்ணெய் உணவுகள் பித்தத்தை அதிகரிக்கும். அவற்றை அளவாக சாப்பிட வேண்டும்.
இவற்றை பின்பற்றுவதன் மூலம் பித்தத்தை குறைக்கலாம் என மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.