சரும பராமரிப்புக்காக நிறைய பணம் செலவளித்து ஃபேஸ் க்ரீம்கள், சீரம், டோனர் போன்ற பொருள்களை வாங்குபவர்கள் ஏராளம். ஆனால், உணவின் மூலம் கிடைக்கக் கூடிய சத்துகளுக்கு நிகராக எதுவும் இல்லை என வல்லுநர்கள் கூறுகின்றனர். அந்த வகையில் சரும பராமரிப்புக்காக மருத்துவர் சிவராமன் சில உணவுகளை பரிந்துரைத்துள்ளார்.
முதலில் நாள் ஒன்றுக்கு அனைவரும் அன்றாடம் சுமார் 4 முதல் 4.5 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 முதல் 2.5 லிட்டர் தண்ணீராவது கண்டிப்பாக குடிக்க வேண்டியது அவசியமாகும்.
இதேபோல், நாம் வசிக்கும் இடங்களுக்கு அருகே கிடைக்கக் கூடிய இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பழங்களை சாப்பிட வேண்டும்.
உடலுக்கு சூடு அளிக்கக் கூடிய உணவுகளை அதிகமாக சாப்பிடக் கூடாது. உதாரணமாக, கோழிக் கறி அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என மருத்துவர் சிவராமன் கூறுகிறார். அதேபோல், எண்ணெயில் அதிகப்படியாக பொறித்து எடுத்த உணவுகளை சாப்பிடக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவை சருமத்தில் வறட்சியை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை.
தமிழ் மருத்துவத்தில் சில வகை பண்டங்களை கரப்பான் பண்டங்கள் என பட்டியலிடப்பட்டுள்ளதாக மருத்துவர் சிவராமன் கூறுகிறார். மீன், நண்டு இறால், கத்திரிக்காய், மக்காச்சோளம், கம்பு அரிசி, வரகு அரிசி போன்றவற்றை அதிகம் உணவில் எடுத்துக் கொள்ளக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த பொருள்களை சருமம் தொடர்பான பிரச்சனைகள் இருக்கும் போது தான் தவிர்க்க வேண்டும். ஒவ்வாமை நோய்களுக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தால் இவற்றை தவிர்க்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தினசரி தலைக்கு குளிப்பதும், வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்து குளிப்பதும் சரும ஆரோக்கியத்திற்கு நல்லது என மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“