/indian-express-tamil/media/media_files/2025/08/31/hands-washing-dish-with-sponge-2025-08-31-14-47-16.jpg)
வீட்டில் தடை செய்யப்பட்ட பொருட்கள் ஒரு மருத்துவர் வீட்டில் தடை செய்த சில பொருட்கள். Photograph: (Image Source: Freepik)
நமது வீடுகளை மாசுபடுத்தி, நமக்குத் தெரியாமலேயே நமது உயிருக்கு கேடு விளைவிக்கும் நச்சுப் பொருட்களைப் பற்றி, அதிகமான சுகாதார நிபுணர்கள் தங்கள் "தவிர்க்க வேண்டிய" பொருட்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறார்கள்.
சமீபத்தில், டிஜிட்டல் கிரியேட்டரான டாக்டர் மனன் வோரா, பொதுவாக பாதிப்பில்லாததாகத் தோன்றும் 6 அன்றாடப் பொருட்களைத் தனது வீட்டில் இருந்து முழுவதுமாகத் தடை செய்திருப்பதாகப் பட்டியலிட்டார். ஏன்? அதற்கான காரணத்தை அவர் இன்ஸ்டாகிராம் பதிவில் இவ்வாறு குறிப்பிட்டார்:
"நான் ஒரு மருத்துவர் என்ற முறையில் என் வீட்டில் நீங்கள் பார்க்க முடியாத பொருட்கள்:
அதிக சர்க்கரை கொண்ட பிஸ்கட்டுகள்: - சுத்திகரிக்கப்பட்ட மைதா நிறைந்தவை, குழந்தைகளுக்கு நல்லதல்ல.
லூஃபா (Loofah) (லூஃபா நார் பொதுவாக குளிப்பதற்கும், பாத்திரங்கள் மற்றும் வீட்டை சுத்தம் செய்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது) - சுத்தம் செய்வது கடினம், சிராய்ப்பை ஏற்படுத்தும், மேலும் கிருமிகள் பெருகுவதற்கு ஏற்ற இடம்.
பாத்திரம் கழுவுவதற்குப் பயன்படுத்தப்படும் நார் - பெரும்பாலானோர் அதை மாதக்கணக்கில் மாற்றுவதில்லை. அதை அடிக்கடி மாற்றுவது அவசியம். அந்த மென்மையான ஸ்பாஞ்ச் நீண்ட நேரம் பயன்படுத்தப்பட்டால் கிருமிகளின் கூடாரமாகிவிடும். (உங்கள் குளியலறையை விடவும் அருவருப்பானது!)
வாசனையுள்ள சானிட்டரி பேட்கள் - சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தும், பெண்ணுறுப்பின் அமிலத்தன்மை அல்லது காரத்தன்மை (ph) அளவைப் பாதிக்கும். தொற்று ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.
கொசுவத்தி சுருள்கள் - நச்சுப் புகைகளை வெளியிடும், குறிப்பாக குழந்தைகள் மற்றும் ஆஸ்துமா நோயாளிகளுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்.
திறந்த சமையலறை குப்பைத் தொட்டிகள் - ஈக்கள், பாக்டீரியா மற்றும் துர்நாற்றங்களை ஈர்க்கும்," என்று அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவின் தலைப்பில் குறிப்பிட்டுள்ளார்.
திருவனந்தபுரத்தில் உள்ள கே.ஐ.எம்.எஸ் ஹெல்த் (KIMSHEALTH) மருத்துவமனையின் உள்மருத்துவத் துறை ஆலோசகரான டாக்டர் கணேஷ் விஸ்வநாதன், இந்தக் கருத்துகளைச் சரிபார்க்க உதவினார். மேலே பட்டியலிடப்பட்ட பொருட்கள் குறிப்பிடத்தக்க உடல்நல அபாயங்களை ஏற்படுத்தலாம் என்று அவர் உறுதிப்படுத்தினார். அதற்குப் பதிலாகப் பயன்படுத்தக்கூடிய சில பாதுகாப்பான மாற்றுகளையும் அவர் பரிந்துரைத்தார்:
அதிக சர்க்கரை கொண்ட பிஸ்கட்டுகள்
அவரது கருத்துப்படி, இவற்றில் சுத்திகரிக்கப்பட்ட மாவு மற்றும் சர்க்கரை அதிகமாக இருப்பதால், அவை ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை விரைவாக அதிகரித்து, நிறைவுணர்வை குறைத்து, உடல் பருமன், நீரிழிவு மற்றும் பல் சிதைவு போன்ற நோய்களுக்கான அபாயத்தை அதிகரிக்கின்றன.
பாதுகாப்பான மாற்று: கொட்டைகள், வறுத்த கொண்டைக்கடலை, புதிய பழங்கள், சர்க்கரை சேர்க்காத தயிர், வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட தின்பண்டங்கள் (சப்பாத்தி, பொரி, காக்கரா).
லூஃபா
இவை ஈரப்பதமாக இருப்பதால், பாக்டீரியாக்கள் தங்கி, சருமத்தில் சிறிய காயங்களை ஏற்படுத்தி, தொற்றுக்கான அபாயத்தை அதிகரிக்கின்றன.
பாதுகாப்பான மாற்று: கைகள், மென்மையான பருத்தித் துணி (தினமும் துவைக்கப்பட வேண்டும்), அல்லது விரைவாக உலரும் சிலிகான் ஸ்க்ரப்பர்.
சமையலறை ஸ்பாஞ்ச்
இவை பாக்டீரியாக்களின் கூடாரங்களாக அறியப்படுகின்றன. அவற்றை முழுமையாகச் சுத்தப்படுத்துவது மிகவும் கடினம்.
பாதுகாப்பான மாற்றுகள்: டிஷ் பிரஷ் (விரைவாக உலரும்), துவைக்கக்கூடிய பாத்திரத்துணிகள், அல்லது ஸ்பாஞ்சுகளை வாரந்தோறும் மாற்றுவது மற்றும் இடையிடையே சுத்தம் செய்வது.
வாசனையுள்ள சானிட்டரி பேட்கள்
வாசனை மற்றும் ரசாயனங்கள் எரிச்சலை ஏற்படுத்தி, தோல் அழற்சி மற்றும் பெண்ணுறுப்பின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும்.
பாதுகாப்பான மாற்று: வாசனையற்ற பருத்தி பேட்கள், மாதவிடாய் கோப்பைகள், பீரியட் உள்ளாடைகள்.
கொசுவத்தி சுருள்கள்
இந்த சுருள்கள் தீங்கு விளைவிக்கும் புகையை (நுண் துகள்கள், ஃபார்மால்டிஹைட்) வெளியிடுகின்றன - இது நுரையீரலில் எரிச்சலை ஏற்படுத்தி, உட்புற மாசுபாட்டை அதிகரிக்கிறது.
பாதுகாப்பான மாற்று: ஜன்னல் திரைகள், கொசு வலைகள், உடலில் பூசிக்கொள்ளும் கொசு விரட்டிகள் (DEET/பிகாரிடின்), மின்விசிறிகள். நல்ல காற்றோட்டத்துடன் கூடிய மின்சார ஆவியாக்கிகள் (electric vaporizers)
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/08/31/woman-throwing-wasted-food-into-steel-bin-2025-08-31-14-54-00.jpg)
திறந்த சமையலறை குப்பைத் தொட்டிகள்
இந்தத் திறந்த குப்பைத் தொட்டிகள் பூச்சிகளை ஈர்த்து, துர்நாற்றத்தை உருவாக்கி, கொசுக்கள் பெருகுவதற்கு காரணமாகின்றன.
பாதுகாப்பான மாற்று: மூடியுள்ள பெடல் குப்பைத் தொட்டிகள், ஈரமான/உலர்ந்த குப்பைகளைத் தனித்தனியாகப் பிரிப்பது, தினமும் குப்பைகளை அகற்றுவது, வாரந்தோறும் சுத்தம் செய்வது.
ஹைதராபாத்தில் உள்ள கிளேனிஜில்ஸ் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவு ஆலோசகர் மற்றும் தலைவர் டாக்டர் மனீந்திரா, நச்சுப் பொருட்களுக்கு குறிப்பாக இளவயதில் ஏற்படும் பாதிப்புகள், தனிநபர்கள் தங்கள் வாழ்க்கை முறையை மறுபரிசீலனை செய்ய வழிவகுக்கும் என்று கூறினார். "ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு பல சுற்றுச்சூழல் மற்றும் வாழ்க்கை முறை காரணிகள் பங்களித்தாலும், அன்றாடப் பொருட்களில் உள்ள நச்சுப் பொருட்களுக்கு நீண்ட கால வெளிப்பாடு ஏற்படுத்தும் தாக்கம் குறித்து விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது," என்று டாக்டர் மனீந்திரா கூறினார்.
இந்த இரசாயனங்களில் மிகவும் கவலைக்குரிய வகைகளில் ஒன்று ஃபெத்தலேட்டுகள் ஆகும், அவை நாளமில்லா சுரப்பிகளைப் பாதிக்கும். Kelley மற்றும் அவரது சகாக்கள் (et al) எழுதிய, 2012ஆம் ஆண்டு வெளியான "Current Problems in Pediatric and Adolescent Health Care" (குழந்தை மற்றும் பதின்ம வயது சுகாதாரப் பராமரிப்பில் தற்போதைய சிக்கல்கள்) என்ற இதழ் வெளியிட்ட ஒரு ஆய்வு, ஃபெத்தலேட்டுகள் ஆண் ஹார்மோன் பாதைகளை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை விரிவாக விளக்குகிறது. இது இனப்பெருக்கம் மற்றும் நரம்பு வளர்ச்சி சம்பந்தமான எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகிறது.
"குறிப்பிட்ட உட்பொருட்கள் உடல்நல அபாயங்களை ஏற்படுத்துகின்றன என்பதற்கான அறிவியல் சான்றுகள் மாறுபட்டிருந்தாலும், 'தேவையற்ற இரசாயன வெளிப்பாட்டைக் குறைக்கும்' கொள்கை புத்திசாலித்தனமானது, குறிப்பாக புற்றுநோய் அல்லது நாட்பட்ட நோய்கள் உள்ளவர்களுக்கு," என்று அவர் கூறினார். "அன்றாடப் பொருட்களின் நச்சுத்தன்மையற்ற பதிப்புகளைப் பின்பற்றுவது ஆரோக்கியத்திற்கான ஒரு செயலூக்கமான அணுகுமுறையாகும், இது தடுப்பு மற்றும் ஒட்டுமொத்த நச்சுத்தன்மையைக் குறைப்பதில் கவனம் செலுத்துகிறது," என்றும் அவர் தெரிவித்தார்.
உங்கள் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளித்து, உங்கள் உடலில் புத்துணர்ச்சி பெற, "சிறிய, அர்த்தமுள்ள மாற்றங்களை" செய்வது அவசியம்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவெளியில் கிடைக்கும் தகவல் மற்றும்/அல்லது நாங்கள் பேசிய நிபுணர்களின் தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. எந்த ஒரு வழக்கத்தையும் தொடங்குவதற்கு முன் உங்கள் சுகாதார நிபுணரிடம் எப்போதும் கலந்தாலோசிக்கவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.