நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களில் முதன்மையான இடம் வகிப்பது டூத் பிரஷ் தான். பார்ப்பதற்கு சிறியதாக இருக்கும் டூத் பிரஷ், நமது ஆரோக்கியத்தில் முக்கிய பங்காற்றுகிறது. பிளாஸ்டிக் டூத் பிரஷ் தொடங்கி எலக்ட்ரானிக் டூத் பிரஷ் வரை பல விதமான பிரஷ்கள் கிடைக்கின்றன. இவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், டூத் பிரஷ்களின் ஆயுள் காலம் எவ்வளவு என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
நாம் பல் துலக்க பயன்படுத்தும் டூத் பிரஷ்ஷை 2 முதல் 3 மாதங்கள் வரை மட்டுமே பயன்படுத்தலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அதன்படி, குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் நமது டூத் பிரஷ்ஷை கட்டாயம் மாற்ற வேண்டும் என கூறப்படுகிறது. சீரான இடைவெளியில் டூத் பிரஷ்ஷை மாற்றினால் ஆரோக்கியத்திற்கு நல்லது மட்டுமின்றி நோய்த் தொற்றுகள் ஏற்படுவதை தவிர்க்கலாம்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபர்கள் வீடு திரும்பிய பின்னர், அவர்கள் புதிய டூத் பிரஷ்ஷை தான் பயன்படுத்த தொடங்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஏற்கனவே, உடல்நிலை பாதிக்கப்பட்டு குணமடைந்ததால் புதிய பிரஷ்ஷை பயன்படுத்துவதன் மூலம் மீண்டும் நோய்த் தொற்று உருவாகாமல் பாதுகாக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இது மட்டுமின்றி, காய்ச்சல், தொண்டை வலி, இருமல், சளி போன்ற பாதிப்புகள் ஏற்பட்டவர்களும் தாங்கள் குணமடைந்த பின்னர் புதிய பிரஷ்ஷை பயன்படுத்த தொடங்க வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது. இவை மீண்டும் அது போன்ற நோய்கள் ஏற்படுவதை தடுக்கிறது.
இதேபோல், நாம் பயன்படுத்தும் டூத் பிரஷ்களில் இலைகள் விரிவடைந்தாலோ அல்லது கடினமாக மாறினாலோ உடனடியாக அதனை மாற்றிவிட வேண்டும். மற்றொருபுறம் எலக்ட்ரானிக் டூத் பிரஷ் பயன்படுத்துபவர்கள், 12 வாரங்களுக்கு ஒரு முறை அதன் இலைகளை மாற்ற வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
சிலர் தங்கள் டூத் பிரஷ்ஷை சுடு தண்ணீரில் போட்டு பயன்படுத்தும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால், அவ்வாறு பயன்படுத்தக் கூடாது எனக் கூறப்படுகிறது. டூத் பிரஷ்கள் பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்டதால் அவற்றை சுடுதண்ணீரில் போட்டு பயன்படுத்தினால் உடலுக்கு பாதிப்பு ஏற்படும் எனக் கூறப்படுகிறது.
மேலும், நீண்ட நாள்களுக்கு வெளியூர் சென்று திரும்பியவர்களும் தங்கள் பழைய டூத் பிரஷ்ஷை மாற்றிவிட வேண்டுமென மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“