சர்க்கரை நோய் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில், இதனை பெரும்பாலும் வயதானவர்களுக்கு வரும் நோய் எனக் கூறுவார்கள். ஆனால், தற்போது இளம் தலைமுறையினருக்கே சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. வாழ்க்கை முறை மாற்றமும் இதற்கு முக்கிய காரணம்.
சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது அவசியம் ஆகும். ஆனால், இதனை சரியாக பராமரிக்காமல் விட்டால் பெரும் பிரச்சனையாகி விடும். இதனை உணவு முறை, உடற்பயிற்சி, சிகிச்சை, யோகா மற்றும் தியானம் போன்றவற்றின் மூலம் கட்டுப்படுத்தலாம்.
குறைந்தபட்சம் 7 மணி நேரம் கட்டாயமாக தூங்க வேண்டும். புரதச் சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். குறிப்பாக, காலை நேரத்தில் 2 இட்லிகள் தான் சாப்பிட வேண்டும். ஆனால், இந்த இட்லிகளை சாம்பாரில் நன்றாக ஊற வைத்து சாப்பிட்டு, அந்த சாம்பாரையும் குடித்து விட்டால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். கருப்பு கவுனி அரிசி போன்றவற்றை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
அசைவம் சாப்பிடுபவர்கள் மீன், கோழி இறைச்சி, முட்டை சாப்பிடலாம். இவற்றை பொறிக்காமல் வேக வைத்து அல்லது குழம்பாக சாப்பிடுவது நல்லது. மதிய உணவாக சிவப்பு அரிசி சாப்பாடு, சிறுதானியம் சாப்பிடலாம். அதிகப்படியான காய்கறிகள் சாப்பிட வேண்டும். பீன்ஸ், கீரை போன்றவற்றை தாராளமாக சாப்பிடலாம்.
கொய்யாப்பழம், தர்பூசணி, பப்பாளி பழங்களை அரை கப் அளவிற்கு சாப்பிடலாம். இதேபோல், சீராக உடற்பயிற்சி செய்து, யோகா போன்றவற்றின் மூலம் மன அழுத்தத்தை குறைத்து, சரியாக மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“