Documentary film wild Karnataka :First Indian wild film released in theaters
Documentary film wild Karnataka : வைல்ட் கர்நாடகா தற்போது இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் அதிகமாக பேசப்பட்டு வரும் மிக முக்கியமான ஆவணப்படமாக அமைந்துள்ளது வைல்ட் கர்நாடகா. தென்னிந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான கர்நாடகாவின் எழில் கொஞ்சும் இயற்கையில் தஞ்சம் வாழும் பறவைகள், விலங்குகள், ஊர்வனங்கள், நில அமைப்புகள், மற்றும் கடற்கரைகளை கொண்டாடும் ஒரு ஆவணப்படமாக இது அமைந்திருக்கிறது.
Advertisment
உங்களுக்கு தெரியுமா இந்த உலகில் அதிக அளவில் புலிகள் மற்றும் யானைகளை கொண்டுள்ள பகுதி கர்நாடகா தான் என்று? தென்மேற்கு பருவமழை முடிவடையும் முதல் நாளான செப்டம்பர் மாதம் 1ம் தேதி துவங்குகிறது இந்த திரைப்படத்தின் முதல் காட்சி. பின்னர், அடுத்த தென்மேற்கு பருவ காலம் வரையிலான ஒவ்வொரு காலநிலையிலும் அங்குள்ள காட்டு விலங்குகளின் பழக்க வழக்கங்கள், வாழ்வியல் முறைகள், உணவுக்காகவும், வேட்டைக்காகவும் விலங்குகள் ஒன்றையொன்று எப்படி சார்ந்துள்ளது என்பதை இந்த படம் விளக்குகிறது.
வைல்ட் கர்நாடகா திரைப்படத்தின் ட்ரெய்லர்
Advertisment
Advertisements
ஒரு முழுமையான வளர்ச்சியடைந்த பெண் கருநாகம் தன்னுடைய முட்டையை எப்படி அடைகாத்து வைத்து, மண்ணில் பெரிய கூட்டினை கட்டி பாதுகாக்கிறது என்பதை அழகாக இதற்கு முன்பு யாரேனும் படம் பிடித்தார்களா என்று தெரியாது. ஆனால் இந்த படத்தை பார்த்து சிலிர்த்து அறிந்து கொள்ளலாம். மழை தான் இந்த உலகில் எல்லாம். தென்மேற்கு பருவமழை துவங்கும் போது காட்டின் ஒவ்வொரு அங்குலமும் எப்படி உயிர்த்து, மகிழ்ந்து புதிய உயிர்களை ஜீவித்து இன்புற்றுருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். கருநாகம் மட்டுமில்லாமல், யானைகள், புலிகள், சிறுத்தைகள், கரடுகளில் வாழும் காட்டுப்பூனைகள், ஓநாய்கள், கரடிகள், மயில்கள் என அனைத்து உயிரினங்களையும் அணு அணுவாக ரசித்து படத்தினை இயக்கியுள்ளனர்.
கர்நாடகாவைச் சேர்ந்த அமோகாவர்ஷா, கல்யாண் வர்மா, சரத் சம்பாத்தி, விஜய் மோகன் ராஜ் ஆகியோர் இயக்கத்தில், புகழ் பெற்ற இயற்கையாளர் மற்றும் வர்ணனையாளருமான சர் டேவிட் ஆட்டன்பரோ இந்த ஆவணப்படத்தினை எழுதியுள்ளார். அவருடைய ஒவ்வொரு வார்த்தையையும் காட்சியோடு ஒப்பிட்டுப் பார்த்து கரைந்து போக விரும்பினால் நிச்சயமாக நீங்கள் இந்த ஆவணப்படத்தினை காண வேண்டும். கர்நாடக வனத்துறை இந்த படத்தினை வழங்கியுள்ளது.
இந்த படம் கர்நாடகாவின் வனவியலை மட்டும் குறிப்பிட்டுவிடவில்லை. மாறாக நம்முடைய கையில் இருக்கும் இந்த இயற்கை அரணை பாதுகாக்கும் கடமை குறித்தும் உணர்த்தி செல்கிறது. ஒவ்வொரு மெய் சிலிரிக்கும் காட்சிக்கும் பின்னால் இசைக்கப்படும் கர்நாடிக் சங்கீத இசைக்கோர்வை மேலும் அழகு ஊட்டுகிறது. 20 புகைப்படக் கலைஞர்கள், 400 மணி நேர வனக்காட்சிகள், 20 ஆயிரம் மணி நேர ஆராய்ச்சியாக மொத்த கர்நாடக இயற்கை சூழலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் படம் என்னவோ வெறும் 53 நிமிடங்கள் மட்டுமே. பி.வி.ஆர் திரையரங்குகளில் மட்டும் இந்த படம் காட்சிப்படுத்தப்படுகிறது.