/indian-express-tamil/media/media_files/2025/05/12/a6lngn0mW0fI3AsUOcXf.jpg)
சாப்பிட்ட உடனே சுகர் கூடுதா? இந்த கஷாய பொடியை இப்படி யூஸ் பண்ணுங்க: டாக்டர் நித்யா
பெருகி வரும் சர்க்கரை நோய் பாதிப்பை கட்டுப்படுத்தவும், அதன் தாக்கத்தை குறைக்கவும் சித்த மருத்துவம் அளிக்கும் தீர்வுகள் நம்பிக்கை அளிப்பதாக உள்ளன. உணவு முறை, அன்றாட பழக்கவழக்கங்கள் மற்றும் இயற்கையின் கொடையான மூலிகைகள் மூலம் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் கொண்டு வருகின்றன. உணவுக்குப் பின் ஏற்படும் திடீர் இரத்த சர்க்கரை அதிகரிப்பு பலருக்கும் கவலை அளிக்கிறது
சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உணவு முறையில் கவனம் செலுத்துவது மிக முக்கியம். குறைந்த கிளைசெமிக் குறியீட்டு (Glycemic Index) கொண்ட உணவுகளை உட்கொள்வது, குளுக்கோஸ் மெதுவாக இரத்தத்தில் கலக்க உதவும். நார்ச்சத்து நிறைந்த உணவுகள் மற்றும் குறைந்த கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை உண்பது இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்க உதவும். குறிப்பாக, கரையக்கூடிய நார்ச்சத்து இரத்தத்தில் சர்க்கரை உறிஞ்சப்படுவதை தாமதப்படுத்துகிறது. முளை கட்டிய தானியங்கள் மற்றும் ராகியை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்
பழங்களை பொறுத்தவரை, காலை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. நெல்லிக்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதம். சிறிய வகை வாழைப்பழங்களான கற்பூரவள்ளி அல்லது ஏலக்கி போன்றவற்றை மிதமாக உட்கொள்ளலாம். முளை கட்டிய தானியங்கள் மற்றும் ராகி போன்ற பாரம்பரிய உணவுகள் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டிற்கு மிகவும் நல்லது.
சித்த மருத்துவத்தில் சர்க்கரை நோய்க்கென பல சிறப்பான மருந்துகள் உள்ளன. அவற்றில் முக்கியமானது சீந்தில் சூரணம். குறிப்பாக சீந்தில் சர்க்கரை, இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், சர்க்கரை நோயினால் ஏற்படும் நரம்பு பிரச்சனைகளுக்கும் சிறந்த மருந்தாக விளங்குகிறது. ஒருநாளைக்கு ஒருகிராம் அளவில் சாப்பிட வேண்டும் என்கிறார் மருத்துவர் நித்யா. அடுத்ததாக, மதுமேகக் குடிநீர் சூரணம். வில்வ பட்டை, நாவல் போன்ற 18-20 மூலிகைகளின் கலவையாகும். 30 நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும். இந்த மூலிகைகள் இரத்த சர்க்கரை அளவை திறம்பட குறைக்க உதவுகின்றன. சர்க்கரை நோயால் ஏற்படக்கூடிய நரம்பு தொடர்பான பிரச்னைகள், வயிற்றுப் புண், அல்சர், ஒற்றை தலைவிலி, தைராய்டு சார்ந்த பிரச்னைகளை போக்குகிறது என்கிறார் மருத்துவர் நித்யா.
உணவு முறையோடு, வாழ்க்கை முறையிலும் சில மாற்றங்களை மேற்கொள்வது அவசியம். தினமும் காலையில் அரை மணி நேரம் நடப்பது இரத்த ஓட்டத்தை சீராக்கி, இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும். யோகா போன்ற உடற்பயிற்சிகள் மன அழுத்தத்தை குறைத்து, ஹார்மோன் சமநிலையை பேணிக்காப்பதன் மூலம் ரத்த சர்க்கரையை குறைக்க உதவுகின்றன. மலச்சிக்கல் சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு பொதுவான பிரச்சனை. இதற்கு திரிபலா சூரணம் சிறந்த நிவாரணம் அளிக்கிறது. தேவைப்பட்டால், நிலாவாரை சூரணத்துடன் சேர்த்துக்கொள்ளலாம். இந்த கலவையை 1 முதல் 5 கிராம் வரை இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் எடுத்துக் கொள்ளலாம்.
இந்த சித்த மருந்துகளை உட்கொள்ளும் முறை மிகவும் முக்கியம். பொதுவாக, இந்த கலவையை 1 முதல் 5 கிராம் வரை இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் கலந்து உட்கொள்ளலாம். தொடர்ந்து மூன்று மாதங்கள் முறையாக உட்கொண்டு வந்தால், HbA1c அளவுகள் கணிசமாக குறைந்து இயல்பு நிலைக்கு வர வாய்ப்புள்ளது.
நன்றி: Dr.Nithya's Varam
பொறுப்பு துறப்பு:இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.