/indian-express-tamil/media/media_files/2025/08/02/dog-bite-rabies-vaccine-2025-08-02-09-39-14.jpg)
Dog bite Rabies Vaccine
தெருநாய்களால் கடிபடுவது இப்போது ஒரு பெரிய பிரச்சனையாகிவிட்டது. இதனால் சாலையில் நடந்து செல்லவே பலருக்கு பயமாக இருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலர் இந்தச் சிக்கலில் சிக்குகிறார்கள். ஆனால், நாய் கடித்தால் நாயைப் போல் குரைப்பார்களா, நாயைப் போல் நடந்து கொள்வார்கள் என்பது உண்மையா? இந்தக் கேள்விக்கான நேரடியான பதில், இல்லை என்பதுதான் என்கிறார் டாக்டர் அருண்குமார்.
நாய் கடித்தால் என்ன பிரச்சனை வரும்?
நாய் கடிப்பதனால் ரேபிஸ் என்செபலைட்டிஸ் (Rabies Encephalitis) என்ற நோய் வரலாம். இந்த நோயைக் கட்டுப்படுத்தவே நாம் வெறிநாய் கடி தடுப்பூசியைப் போடுகிறோம். ரேபிஸ் ஒரு அரிதான நோய் தான். ஆனால் ஒருவேளை வந்துவிட்டால், அதிலிருந்து 100% குணமடைய வாய்ப்புகள் குறைவு, ஏனெனில் இதற்கான முழுமையான சிகிச்சை இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
இதைத்தான் படங்களிலும், மக்களிடமும் நாயைப் போல் குரைப்பது, நடப்பது என்று தவறாகச் சித்தரிக்கிறார்கள். ஆனால் உண்மையில் ரேபிஸ் வந்தால் என்ன நடக்கும் என்பதைப் பார்ப்போம்.
ரேபிஸ் நோயின் உண்மையான அறிகுறிகள் என்ன?
ரேபிஸ் நோய் வந்தவர்களுக்கு நாய் போல குரைக்க மாட்டார்கள். அவர்களுக்கு ஏற்படும் உண்மையான அறிகுறிகள்:
ஹைட்ரோபோபியா (Hydrophobia): தண்ணீரைக் கண்டால் பயம் ஏற்படும். அவர்களால் தண்ணீர் குடிக்க முடியாது.
ஏரோபோபியா (Aerophobia): குளிர்ந்த காற்று பட்டால் மூச்சு விடுவதில் சிரமம், பயம் போன்ற உணர்வுகள் ஏற்படும்.
வலிப்பு வரத் தொடங்கும்.
சுயநினைவை இழக்க நேரிடும்.
கடுமையான காய்ச்சல் ஏற்படும்.
இந்த அறிகுறிகள்தான் ரேபிஸ் நோயின் உண்மையான வெளிப்பாடுகள்.
என்ன செய்ய வேண்டும்?
நாய் கடித்தால் நாயைப் போல் குரைப்பது என்பது வெறும் சினிமா மற்றும் கதைகளில் மட்டுமே நடக்கும் ஒரு விஷயம். இதற்கு அறிவியல் ரீதியாக எந்த ஆதாரமும் இல்லை.
எனவே, நாய் கடித்தால் உடனடியாக மருத்துவரை அணுகி தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கடி மிகவும் ஆழமாக இருந்தால், மருத்துவரின் ஆலோசனைப்படி இம்யூனோகுளோபின் (Immunoglobulin) என்ற மருந்தையும் சேர்த்து எடுத்துக்கொள்வது அவசியம்.
யாராவது நாய் கடித்ததால் நாயைப் போல் நடந்து கொள்கிறார்கள் என்று நீங்கள் பார்த்தால், அது பெரும்பாலும் பயத்தினால் ஏற்படும் ஒரு மனநிலை வெளிப்பாடாக (psychiatric manifestation) இருக்கலாமே தவிர, அது ரேபிஸ் நோயின் அறிகுறி அல்ல, என்று முடிக்கிறார் டாக்டர் அருண்குமார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.