மக்கள் தங்கள் வீடுகளில் நாய் வளர்ப்பதும் அதற்கு செல்லப்பெயர் வைத்து அழைப்பது என்பதும் உலகம் முழுவதும் ஒரு பழக்கமாக உள்ளது. பொதுவாக மனிதர்கள் தங்கள் வளர்ப்பு நாய்களுக்கும் வைக்கும் பெயர்களில் ஒன்று டைகர். அப்படி நீங்கள் கூட ஒரு டைகரை வளர்த்துக்கொண்டிருக்கலாம். அப்படி, உங்கள் டைகர் எதிர்பாராத விதமாக காயம் அடைந்தால் நீங்கள் அதற்கு வீட்டிலேயே வைத்தியம் செய்லாம். அப்படி வைத்தியம் செய்வதற்கான எளிய முறைகள் இங்கே தருகிறோம்.
நாய்கள் பொதுவாக விபத்து, பாக்டீரியா தொற்று அல்லது பிற நாய்கள் மற்றும் விலங்குகளுடன் சண்டை போடும்போது காயம் அடைகிறது என்று கே 2 குழுமத்தின் டியர் பெட் நிறுவனர் மோஹித் பன்சால் கூறுகிறார். “எந்த காயமானாலும் அது சிறியதாக இருந்தாலும் சரி அல்லது பெரியதாக ஆழமாக இருந்தாலும் இருந்தாலும் அவை உடனடியாக கவனிக்கப்படாவிட்டால், உங்கள் நாய்க்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தும். அதோடு, சிகிச்சை அளிக்கப்படாத காயங்கள் பாக்டீரியா தொற்றுநோய்களுக்கு ஆளாகின்றன. அதனால், அவை ஒரு புண் ஆக மாறக்கூடு” என்று மோஹித் பன்சால் indianexpress.com இடம் கூறினார்.
எனவே, நீங்கள் வளர்க்கிற செல்ல நாய் டைகருக்கு காயம் ஏற்பட்டால் வீட்டிலேயே அதன் காயங்களுக்கு சிகிச்சையளிக்க சில முறைகளைக் கற்றுக்கொள்வது அவசியம் என்று அவர் பரிந்துரைக்கிறார்.
ரத்தப்போக்கை கட்டுப்படுத்துதல்
உங்கள் நாய்க்கு காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறினால், முதல் மற்றும் மிகவும் முக்கியமான செயலாக காயத்தில் இருந்து ரத்தப்போக்கை கட்டுப்படுத்த வேண்டும். ரத்தப்போக்கு இதயத் துடிப்பு குறைவதற்கும் குறைந்த இரத்த அழுத்தத்திற்கும் வழிவகுக்கும். நீண்ட நேரம் அதிக அளவிலான இரத்தம் வெளியேறினால் உறுப்பு செயலிழப்பு மற்றும் மரணம் கூட ஏற்படக்கூடும். இரத்தத்தை கட்டுப்படுத்துவதற்கான சிறந்த வழி, காயத்தை ஒரு சிறிய துண்டில் மூடி அழுத்த வேண்டும். அதனால், 5-10 நிமிடங்களுக்குள் இரத்தப்போக்கு நின்றுவிடும்.
காயத்தை சுத்தப்படுத்துதல்
நாயின் காயத்தில் குளிர்ந்த நீரை விட்டு அல்லது காயத்தில் உள்ள அழுக்கு, தூசு அல்லது களிம்புகளை அகற்ற உப்பு கரைசலைப் பயன்படுத்துங்கள். காயமடைந்த இடத்தைச் சுற்றி முடியைக் கிளிப் செய்து, காயத்தில் நாயின் முடி படாமல் இருக்க திரவ லூப்ரிகேண்ட்/ எலக்ட்ரிக் கிளிப்பர்ஸ் / கத்தரிக்கோல் / டிஸ்போஸபிள் ரேஸர் -களைப் பயன்படுத்தி முடியை அகற்றுங்கள். காயமடைந்த பகுதியை சுத்தம் செய்ய வெதுவெதுப்பான தண்ணீரைப் பயன்படுத்தி உலர்ந்த மற்றும் சுத்தமான துணி அல்லது டிஸ்யூ பேப்பரைப் பயன்படுத்தி சுத்தம் செய்யுங்கள்.
காயத்தை மூடி மருந்து போடுதல்
காயத்தில் கிருமி தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கு ஒரு பஞ்சில் ஆண்ட்டி செப்டிக் மருந்தை அல்லது பெட்டாடின் கரைசல் / குளோரெக்சிடைனை மெதுவாக எடுத்து பயன்படுத்துங்கள். பின்னர், கட்டு போடுவதற்கு தூய்மையான துணியைக் கொண்டு அல்லது கட்டு போடும் துணியைக் கொண்டு காயத்திற்கு கட்டு போடுங்கள். கட்டு விலகாமல் இருக்க நாய் அதை எடுத்துவிடாமல் இருக்க ஒரு டேப் அல்லது கிளிப்பைப் பயன்படுத்துங்கள். உங்கள் நாய் காயத்திற்கு போடப்பட்ட கட்டை நக்கி அல்லது கடிப்பதைத் தடுக்க நீங்கள் ஒரு ஈ-காலர் பயன்படுத்தலாம். நாய் காயத்தை நாக்கால் நக்கினால் அது பாக்டீரியா பரவுவதற்கு வழிவகுக்கும்.
கூடுதல் பாதுகாப்பாக காயத்தில் ஈக்கள், பூச்சிகள் மொய்க்காமல் இருக்க காயமடைந்த பகுதியில் ஸ்பிரே மருந்தை தெளிக்கலாம். இந்த மருந்து தெளிப்பதால் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா, வைரஸ், புரோட்டோசோவா, கொக்கிப் புழு, அல்லது தோல் நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும் பிற நோய்க்கிருமிகளைக் கொன்று காயத்தை குணப்படுத்தும் செயல்முறையை துரிதப்படுத்துகிறது. அதுமட்டுமில்லாமல், சில காயங்களுக்கு தெளிக்கும் ஸ்ப்ரே மருந்துகள் வலியையும் வீக்கத்தையும் ஓரளவிற்கு குறைக்கின்றன.
“நாயின் காயத்தில் நோய்த்தொற்று ஏற்படும் இடத்தை வெப்பத்திலிருந்து தடுப்பதை உறுதி செய்து, வீக்கம், சிவத்தல், திரவம் வெளியேறுதல் போன்றவற்றை சரிபார்க்க காயமடைந்த தளத்தை தொடர்ந்து கண்காணியுங்கள். உங்கள் நாயின் காயம் சில நாட்களில் குணமடையவில்லை என்றால், யாராவது ஒரு கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் செலுங்கள்” என்று மோஹித் பன்சால் பரிந்துரைத்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.