/indian-express-tamil/media/media_files/2025/07/30/deep-sleep-2025-07-30-11-08-06.jpg)
இரவில் நிம்மதியான தூக்கம் இல்லையா? இந்த ஆபத்துகள் இருக்கு; டாக்டர் ராஜலட்சுமி எச்சரிக்கை
அவசர வாழ்க்கையில், நாம் சாதாரணமாக நினைக்கும் விஷயம், ஆனால் நம் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு மிக அத்தியாவசியமான ஒன்று எது தெரியுமா? அதுதான் தூக்கம்!. தூக்கமின்மை நம் உடலையும், மனதையும் எப்படிப் பாதிக்கலாம் என்பதை நாம் அறிந்து கொள்வது அவசியம். இதனை டிரெடிசனல்கேர் ஹால்பிடல் டாக்டர் ராஜலட்சுமி கூறி உள்ளார்.
தூக்கமின்மை, நம் அன்றாட வாழ்க்கையில் பல உடனடிப் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. படபடப்பு, டென்ஷன், எந்தச் செயலிலும் கவனம் செலுத்த முடியாமை போன்ற உணர்வுகள் இருக்கிறதா? பகலில் தூக்கம், சோர்வு, பசியின்மை, குமட்டல் (அ) மலச்சிக்கல் போன்ற தொந்தரவுகள் இருக்கிறதா? இவை அனைத்தும் தூக்கமின்மையின் குறுகிய கால விளைவுகளே. இந்த அறிகுறிகள் சாதாரணமானவை என்று அலட்சியப்படுத்த கூடாது, ஏனெனில் இவை பெரிய பிரச்னைகளுக்கு ஆரம்பமாக இருக்கலாம் என்கிறார் டாக்டர் ராஜலட்சுமி.
தூக்கமின்மை என்பது ஒருநாள் பிரச்னை மட்டுமல்ல. இது நீண்ட காலம் தொடரும்போது, நம் உடலை பல தீவிர நோய்களுக்கு உள்ளாக்குகிறது. நீரிழிவு, ரத்த அழுத்தம், இதயப் பிரச்னைகள், புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் வருவதற்கான அபாயத்தை தூக்கமின்மை அதிகரிக்கிறது. இவை உடல் உறுப்புகளைப் படிப்படியாகப் பாதித்து, ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தையும் குறைத்துவிடும். தூக்கமின்மைக்கும் நம் பித்தநீர் சுரப்புக்கும் இடையே நேரடித் தொடர்பு உள்ளது என்பது பலருக்குத் தெரியாது. இரவில் சரியாகத் தூங்காதவர்களுக்கு, 24 மணி நேர பித்தநீர் சுரப்பு சீராக இருக்காது. இது அஜீரணம், அல்சர், பித்தப்பைக் கற்கள் போன்ற செரிமானப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். மேலும், நாள்பட்ட மலச்சிக்கலால் அவதிப்படுபவர்களுக்கு, குடல் கசிவு எனப்படும் நிலை உருவாகி, தன்னியக்க நோய்கள் (Autoimmune Disorders) வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் என்கிறார் டாக்டர் ராஜலட்சுமி.
தூக்கமின்மை என்பது சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டிய விஷயம் அல்ல, நம் உடலுக்குச் செய்யும் பெரிய துரோகம். ஆரோக்கியமான வாழ்க்கை வாழவும், நீண்ட ஆயுளைப் பெறவும், நாம் ஒவ்வொருவரும் தூக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நல்ல இரவுத் தூக்கம் என்பது, நம் உடல் தானாகவே தன்னை சரிசெய்து கொள்ளும் அற்புதமான செயல் என்கிறார் டாக்டர் ராஜலட்சுமி.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.