வீட்டில் பயன்படுத்த முடியாத பொருள்களைக் கொண்டு கிராஃப்ட் செய்வது எப்படி என இணையத்தில் நாம் தேடி இருப்போம். அந்த வகையில் பழைய சேலை வைத்து கால்மிதி மேட்டை நாம் செய்யலாம்.
காட்டன் சேலைகளாக இருந்தால் அவை ஈரத்தை உறிந்து கொள்வதற்கு வசதியாக இருக்கும். அதன்படி, சேலையை இரண்டு பிரிவுகளாக எடுத்து, ஆறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். ஆனால், சேலையின் அடிப்பகுதி வரை வெட்டாமல், இறுதிப் பகுதியை மட்டும் அப்படியே விட வேண்டும். பின்னர், இதனை இரண்டு பாகங்களாக பிரித்துக் கொள்ள வேண்டும்.
இப்போது உங்கள் கைகளில் இரு பிரிவுகளாக, ஆறு துண்டுகள் இருக்கும். இதனை ஜடை பின்னுவது போன்று தனித்தனியாக பின்னிக் கொள்ள வேண்டும். இதன் பின்னர் இரு பாகத்தின் அடிப்பகுதியையும், சேர்த்து நூலால் இறுக்கமாக கட்டிக் கொள்ள வேண்டும்.
இதையடுத்து, முறுக்கு பிழிவதைப் போல் சேலை பின்னலை வட்டவடிமாக சுற்ற வேண்டும். இதில் சீரான இடைவெளியில் ஊசி நூல் கொண்டு தைக்க வேண்டும். இவ்வாறு சுற்றி முடித்தால் வீட்டிற்கு தேவையான கால்மிதி மேட் தயாராகி விடும்.