/indian-express-tamil/media/media_files/2025/10/31/download-51-2025-10-31-15-34-31.jpg)
தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவாக திகழ்பவை இட்லி மற்றும் தோசை தான். காலை, மாலை என எந்த நேரத்திலும் சாப்பிடத் தகுந்த, எளிமையானதும் சுவையானதுமான இந்த உணவு, பெரும்பாலான வீடுகளில் தினமும் இடம்பிடிக்கும். இல்லத்தரசிகளுக்கு சமையல் கற்றல் ஆரம்பமே இதிலிருந்தே துவங்குகிறது. “மாவு அரைத்து வைத்தால் 2-3 நாட்களுக்கு டிபன் கவலை இல்லை” என்று பல பெண்கள் நினைப்பதும் தவறல்ல.
ஆனால், இந்த இட்லி–தோசை வாழ்க்கையில் அடிக்கடி ஒரு பிரச்சனை வருவது உண்டு — தோசைக்கல்லில் தோசை ஒட்டுவது! இது ஒரு சாதாரண பிரச்சனையாக இருந்தாலும், பல பெண்களுக்கு இது ஒரு பெரும் “சமையல் சவால்”!
தோசை ஒட்டும் பிரச்சனை – காரணம் என்ன?
எவ்வளவு அனுபவம் இருந்தாலும், சில நேரங்களில் தோசைக்கல் “சதி” செய்கிறது. ஒரு நாள் தோசை அழகாக வட்டமாக வர, மறுநாள் அது கல்லில் ஒட்டிக்கொண்டு பிளந்து விடும். இதனால் தோசை அழகாக வராமல் போகிறது. இதற்குக் காரணம், தோசைக்கல்லில் தங்கும் எண்ணெய் துகள், மாவு கழிவு, ஈரப்பதம் போன்றவை. இவை கல்லின் மேற்பரப்பை மந்தமாக்கி, தோசை ஒட்டுவதற்கு வழிவகுக்கின்றன.
வீட்டிலேயே எளிய தீர்வு – உப்பும் தேங்காய் எண்ணெயும் போதும்!
இதற்கு விலை உயர்ந்த சுத்திகரிப்பு திரவங்கள் தேவையில்லை. நம் வீட்டிலேயே இருக்கும் உப்பும் தேங்காய் எண்ணெயும் போதும்.
செய்யும் முறை:
- முதலில் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து நன்கு சூடாக்கவும்.
- கல் நன்றாக சூடானதும், அதில் 4–5 ஸ்பூன் அளவு உப்பு (கல் உப்பாக இருந்தால் சிறந்தது) சேர்த்து சமமாக பரப்பவும்.
- இந்த உப்பு, கல்லில் உள்ள ஈரப்பதத்தையும் சிறிய துகள்களையும் அகற்றும்.
- அடுப்பை அணைத்து, அந்த உப்பை கொண்டு பாத்திரம் கழுவுவது போல கல்லை நன்றாக தேய்த்துக் கொள்ளவும்.
- அதன் பிறகு உப்பை முழுமையாக துடைத்து அகற்றவும்.
- இப்போது மீண்டும் கல்லை அடுப்பில் வைத்து சற்று சூடாக்கி, தேங்காய் எண்ணெய் சிறிது ஊற்றி முழுவதும் தேய்க்கவும்.
- கல் நன்கு உலர்ந்ததும், அது பயன்படுத்தத் தயாராகிவிடும்.
இதன் பயன்கள்
- தோசைக்கல் மீண்டும் புதிய கல்லைப் போல பளபளக்கும்.
- தோசை இனி ஒட்டாது.
- தோசை வட்டமாகவும், மொறு மொறுப்பாகவும் சுவையாகவும் வரும்.
- கல்லின் ஆயுட்காலமும் நீடிக்கும்.
வீட்டில் தினமும் சமைக்கும் உணவின் அடிப்படை தோசை தான். அதைச் சுலபமாகவும் அழகாகவும் சுட, தோசைக்கல் பராமரிப்பு முக்கியம். வீட்டிலுள்ள இந்த இரண்டு எளிய பொருட்கள் — உப்பும் தேங்காய் எண்ணெயும் — உங்கள் தோசைக்கல்லை புதிதாக மாற்றிவிடும்.
இனி தோசை ஒட்டும் கவலை இல்லை; உங்கள் தோசை உங்கள் பேச்சைக் கேட்கும்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us