தக்காளி, வெங்காயம் மீனுடன் சாப்பிடும்போது சளி பிடிக்கிறது இது ஏன் டாக்டர் என்று ஒரு சுவாரசியமான கேள்வியை கேட்கிறார்கள் என்று கூறும் டாக்டர் கார்த்திகேயன், ரூபாய் நோட்டு மூலம் சளி பிடிக்குமா என்பதையும் விளக்குகிறார்.
டாக்டர் கார்த்திகேயன் தனது யூடியூப் சேனலில் கூறியிருப்பதாவது: “தக்காளியோ, வெங்காயமோ, பழங்களோ, ஆரஞ்சு பழம் என எந்த ஒரு உணவாலும் சளி பிடிக்காது என்று நான் பலமுறை சொல்லி இருக்கிறேன். அதே போல, தயிர் சாப்பிடுவதால் எல்லாம் சளி பிடிக்காது என்று கூறியுள்ளார்.
மேலும், சளி என்றாலே பொதுவாக ஒரு வைரஸ் கிருமியினால் வரும், இந்த வைரஸ்கள் நமக்கு பக்கத்தில் இருப்பவர்கள் இடமிருந்து நமக்கு வரும். நமக்கு பக்கத்தில் இருக்கக்கூடிய நண்பர்கள், உறவினர்கள் இவர்கள் மூலமாகத்தான் வருமே தவிர, நீங்கள் சாப்பிடக்கூடிய பொருள்களில் இருந்து வருவது மிக மிக அரிது என்பதைவிட அது நடக்கவே நடக்காது என்று டாக்டர் கார்த்திகேயன் கூறுகிறார்.
“அப்புறம் ஏன் டாக்டர் சில உணவுகளை சாப்பிடும் போது எனக்கு மூக்கிலிருந்து தண்ணியாக ஒழுக ஆரம்பித்து விடுகிறது” என்று கேட்டீர்கள் என்றால், அது ஒவ்வாமை அலர்ஜி தானே தவிர, அது சளி பிடிப்பது கிடையாது. பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளால் வரக்கூடிய சளி பிடிப்பதற்கும் இதற்கும் சம்பந்தம் கிடையாது என்று டாக்டர் கார்த்திகேயன் கூறுகிறார்.
சில பேருக்கு கட்டுப்படுத்த முடியாமல் அலர்ஜி வரும், அப்போது அலர்ஜி மாத்திரை சாப்பிட்டால் உடனே கட்டுப்படும், அந்த நேரத்தில் சரி ஆகிவிடும், ஆனால் மறுபடியும் இதே உணவை நீங்கள் சாப்பிடும்போது இதே மாதிரி மூக்கில் தண்ணீர் ஒழுகும். இந்த மாதிரி இருந்தால் நீங்கள் சளி பிடிக்கிறது என்று நினைக்கிறீர்கள். ஆனால், நான் சொல்வது என்னவென்றால் அது ஒரு வகையான அலர்ஜி ஒவ்வாமை தான் என்று டாக்டர் கார்த்திகேயன் கூறுகிறார்.
பொதுவாக உணவினால் நமக்கு வரக்கூடியது உணவு ஒவ்வாமையினால் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி தான் நமக்கு வரக்கூடிய பிரச்சனை. எந்த உணவாக இருந்தாலும் சரி அதன் மூலமாக நமக்கு சளி பிடிக்காது, சளி பிடிப்பதற்கு காரணம் நம்முடைய சுற்றுப்புறச் சூழ்நிலைகள் நம்மைச் சுற்றி இருக்கக்கூடிய மனிதர்கள், அவர்களுக்கு இருக்கக்கூடிய தொற்று நமக்கு வரக்கூடியது தான். ஆனால், நாம் அதைப்பற்றி கண்டு கொள்வதே கிடையாது என்று டாக்டர் கார்த்திகேயன் கூறுகிறார்.
சாதாரணமாக சளி பிடித்தால் கூட நாம் இந்த கைகளை சுத்தம் செய்வது போன்ற தூய்மையாக வைத்துக் கொள்ளும் முறையை செய்வதில்லை. கைக்குட்டை வைத்து மூக்கை சிந்திக் கொண்டிருக்கிறோம். அதே கைகளில் மற்றவர்களுக்கு எல்லா பொருட்களையும் எடுத்துக் கொடுக்கிறோம், நாம் பொருட்களை வாங்குகிறோம், இதன் மூலம் நம்முடைய கைகளால் அந்த கிருமிகளை தொடர்ந்து பரப்பிக் கொண்டிருக்கிறோம் என்று டாக்டர் கார்த்திகேயன் எச்சரிக்கிறார்.
சாதாரணமாக உங்கள் கைகளில் இருந்து ஒரு ரூபாய் நோட்டு இன்னொருவருக்கு கொடுத்தீர்கள் என்றால் அந்த ரூபாய் நோட்டு வழியாக உங்களுக்கு வைரஸ் பரவலாம், பாக்டீரியாவும் பரவலாம் புரிந்து கொள்ளுங்கள். இப்படி எல்லாம் உங்களுக்கு சளி பிடிக்கலாமே தவிர, இன்னொரு மனிதர் தான் உங்களுக்கு சளி பிடிக்கவே காரணம். அதனால், சளி பிடிப்பதற்கு உணவு காரணம் கிடையாது இதை புரிந்து கொள்ளுங்கள் என்று டாக்டர் கார்த்திகேயன் கூறுகிறார்.
ஆனால், பழங்கள் காய்கறிகள் மூலமாக நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி தான் அதிகரிக்கும். அவை சளி பிடிக்காமல் தடுக்குமே தவிர, சளியை உண்டாக்காது. தயிர் சாப்பிடுவதால் பிரச்னை இல்லை, இன்னொரு விஷயம் என்னவென்றால் சில்லுனு எதையாவது சாப்பிட்டோம் என்றால் அது நமக்கு சளியை ஏற்படுத்தும் என்று நினைக்கிறோம் இல்லையா, சில்லுனு சாப்பிட்டாலும் உங்களுக்கு சளியை உண்டாக்குவது கிடையாது. வேறு ஒரு மனிதர் உங்கள் பக்கத்தில் இருக்கிறார் அல்லது இந்த ஜூஸ் கொடுத்த மனிதனுக்கு சளி இருக்கிறது அதனால் தான் சரி தொந்தரவு உண்டாகுமே தவிர நீங்கள் சில்லென முடித்ததனால் சளி உண்டாகவில்லை. மேலும், நாம் சில்லென குளிர் பானங்களை குடிக்கிறோம் என்றால் அந்த குளிர்பானங்களில் சர்க்கரை கலக்கப்பட்டு இருக்கிறது, சர்க்கரை எதிர்ப்பு சக்தியை குறைக்க கூடியது. இதனால், மிகவும் எளிதாக மற்றவர்களிடமிருந்து சளி உங்களுக்கு பரவலாம் என்று டாக்டர் கார்த்திகேயன் கூறுகிறார்.
அதனால், எவ்வளவு சொன்னாலும் இந்த உணவெல்லாம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்று நம்முடைய மக்கள் மனங்களில் இருகப் பற்றிக் கொண்டிருக்கும் இந்த மூடநம்பிக்கையை போக்க இதைக் கொண்டு போய் சேருங்கள். அதனால், உணவினால் பழங்களினால் தயிரினால் காய்கறிகளினால் சளி பிடிக்காது. ஆனால், நீங்கள் வெளியே செல்லும்போது மாஸ்க் அணிந்து கொண்டு செல்ல வேண்டும், வீட்டுக்கு வரும்போது கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். இப்படி இருந்தால் பெரும்பாலும் சளி பிடிக்க வாய்ப்பே கிடையாது. ஏனென்றால், நீங்கள் கிருமி தொற்றி மூக்கு வழியாக வருவதையும் கை வழியாக வருவதையும் தடுத்து விட்டோம்.கை வழியாக என்றால் ரூபாய் நோட்டை பிடித்தால் அந்த கிருமி நம் கைகளில் ஒட்டிக்கொண்டு வரும், நாம் அதற்குபிறகு, மூக்கில் கை வைக்கும்போது அல்லது ஏதாவது செய்யும்போது நம்ம மூக்கு வழியாக அந்த கிருமி உள்ளே புகுந்து கொள்கிறது. இதே கான்செப்ட் தான் கொரோனாவிலும் நடந்தது. எல்லா சளி தொற்றுகளுக்கும் முக்கிய காரணம் கிருமிகள் உள்ளே வருவதற்கு ஏற்கனவே தொற்று உள்ள சளி தொற்று உள்ள மற்ற மனிதர்கள் தான் என்று டாக்டர் கார்த்திகேயன் கூறியுள்ளார்.