நீலகிரியில் இ-பாஸ் தொடர்பான புதிய அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை நாளை (ஏப்ரல் 22) முதல் அமலுக்கு வருகிறது.
கோடை விடுமுறையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரிப்பது வழக்கம். இந்த சூழலில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இ-பாஸ் நடைமுறை கட்டாயமாக்கப்பட்டது.
அந்த வகையில் வார நாட்களில் 6000 வாகனங்களுக்கும், வார இறுதியில் 8000 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நடைமுறையால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறிய வணிகர்கள், இதனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு முன்பாக நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள 14 சோதனை சாவடிகளிலும் இ-பாஸ் இருந்தால் மட்டுமே வாகங்கள் அனுமதிக்கப்பட்டு வந்தன. ஆனால், நாளை (ஏப்ரல் 22) முதல் 4 முக்கிய சோதனை சாவடிகளில் மட்டுமே இந்த இ-பாஸ் சோதனை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளிடப்பட்ட அறிக்கையில், "நீலகிரி மாவட்டத்திற்கு 01.04.2024 முதல் வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. தற்போது 07.04.2025 அன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது மாண்பமை சென்னை உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட அறிவுரையின்படி பின்வரும் நுழைவு வாயில்களில் மட்டும் இ-பாஸ் நடைமுறை பின்பற்றப்படும். குறிப்பாக, கல்லாறு, குஞ்சப்பணை, மசினகுடி மற்றும் மேல் கூடலூர் ஆகிய 4 இடங்களில் இந்த நடைமுறை 22.04.2025 முதல் அமலுக்கு வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.