பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் சூழலில், நம் வீட்டை சுத்தப்படுத்துவதே பெரிய வேலையாக தோன்றும். அந்த வகையில் உங்கள் வீட்டை எளிமையாக சுத்தப்படுத்துவதற்கான சிம்பிள் டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ் குறித்து தற்போது பார்க்கலாம். இவை உங்கள் நேரத்தை மிச்சப்படுத்த உதவி செய்யும் வகையில் அமையும்.
ஃப்ரிட்ஜ், கப்போர்ட் போன்ற பொருட்களின் அடிப்பகுதியில் இருக்கும் குப்பைகளை அகற்றுவது சிரமமாக இருக்கும். ஆனால், இதனை எளிமையாக மாற்ற முடியும். இதற்காக வீட்டில் துணிகளை காயப்போட பயன்படுத்தப்படும் ஹங்கர் மற்றும் பழைய சாக்ஸ் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஹங்கரில் சாக்ஸை மாட்டிவிட்டு, அதன் மூலம் ஃப்ரிட்ஜ், வாஷிங் மிஷின் மற்றும் கப்போர்ட் ஆகியவற்றின் அடிப்பகுதியில் இருக்கும் குப்பைகளை எளிதாக அகற்றலாம். இதற்காக விலை உயர்ந்த வாக்கும் க்ளீனர்களை வாங்க வேண்டிய அவசியமும் இல்லை, எடை அதிகமான பொருட்களை சிரமப்பட்டு தூக்க வேண்டிய தேவையும் இல்லை.
இதேபோல், ஒரு பக்கெட்டில் கல் உப்பு மற்றும் கம்ஃபோர்ட் இரண்டையும் சேர்த்து கலக்க வேண்டும். இந்த நீரில் நாம் பயன்படுத்திய பழைய சாக்ஸை ஊறவைத்து, அதனை மாப்பின் அடிப்பகுதியில் மாட்டி விட வேண்டும். இப்போது சாக்ஸ் மாட்டியிருக்கும் மாப் கொண்டு டைல்ஸை தேய்த்து சுத்தப்படுத்தலாம். இது சாதாரணமாக மாப் கொண்டு சுத்தம் செய்வதை விட எளிமையாக இருக்கும். கறையும் சுத்தமாக நீங்கி விடும்.
மேலும், ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர், 2 ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் வினிகர் சேர்த்து கலக்க வேண்டும். இந்த தண்ணீரில் பழைய சாக்ஸை நனைத்து, அதை கொண்டு மெத்தைகளை துடைக்கலாம். இப்படி செய்தால் மெத்தைகளில் இருக்கும் அழுக்குகள் நீங்கி விடும்.