வீட்டை பராமரிப்பது என்பது சவாலான காரியம். குறிப்பாக, கிட்சனை சுத்தமாக வைத்திருப்பது என்பது மிகக் கடினமான ஒன்று. ஆனால், சில எளிமையான வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் நம் நேரத்தை மிச்சப்படுத்த முடியும். அவை என்னவென்று தற்போது நாம் காணலாம்.
வீட்டில் இருக்கும் பல்லி, கரப்பான் பூச்சி தொல்லைகளுக்கு சுலபமாக நம்மால் தீர்வு காண முடியும். இதற்காக ஒரு பச்சை மிளகாய், ஒரு பூண்டு, 6 மிளகுகள் ஆகியவற்றை தண்ணீரில் சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்க வேண்டும். இந்த நீரை வடிகட்டி ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ள வேண்டும். பின்னர், கிட்சன் உள்ளிட்ட வீட்டில் இருக்கும் அனைத்து பகுதிகளிலும் இந்த நீரை தெளிக்கவும். இவ்வாறு செய்தால் கரப்பான் பூச்சிகள், பல்லி, எறும்புகள் உள்ளிட்டவற்றின் தொல்லைகள் இருக்காது.
சாப்பிடுவதற்காக வாங்கி வரும் வாழைப் பழங்கள் சில நேரங்களில் சீக்கிரமாக பழுத்து அழுகி விடும். இதனால், பழங்கள் வீணாகி விடும். இதனை மிக சுலபமாக தடுத்து விடலாம். நாம் சாப்பிடுவதற்கு எடுத்த பழங்கள் போக மீதமுள்ள பழங்களின் காம்பு பகுதிகளை, சில்வர் பேப்பர் கொண்டு சுற்றி வைக்கலாம். இவ்வாறு செய்தால் பழங்கள் சீக்கிரம் அழுகாமல் தடுக்க முடியும்.
வீட்டின் கதவு, ஜன்னல், கட்டில் போன்ற மரத்தால் ஆன பொருள்களை சுத்தப்படுத்துவது சிரமமான காரியம். இதை எளிதாக்குவதற்கான ஒரு வழிமுறையை தற்போது காணலாம். சிறிய பாத்திரத்தில் கொஞ்சமாக தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில், வெள்ளை துணிகளுக்கு பயன்படுத்தும் நீலத்தை 3 துளிகள் விட வேண்டும். இத்துடன் சிறிது அளவு எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பின்னர், இந்த நீரில் துடைப்பதற்கு பயன்படுத்தப்படும் துணியை நன்றாக நனைத்து, அதை வைத்து துடைக்கலாம். இதன் மூலம் எளிதாக சுத்தப்படுத்த முடியும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“