வீட்டு பராமரிப்பில் பெரும் சவாலாக இருப்பது கிட்சனை சரியாக கையாள்வது தான். அந்த வகையில் கிட்சன் பராமரிப்பில் உள்ள சில டிப்ஸ்கள் மற்றும் ட்ரிக்ஸ்களை இந்தப் பதிவில் நாம் பார்க்கலாம்.
புதிதாக காய்கறி வெட்டி பழகுபவர்களுக்கு அடிக்கடி கைகளில் காயம் ஏற்படுவது வழக்கம். அதனை தடுப்பதற்கு ஒரு தேங்காய் சிரட்டையை பயன்படுத்தி காய்கறிகளை எளிமையாக வெட்ட முடியும்.
தேங்காய் சிரட்டையை எடுத்து அதன் மேல் இருக்கும் அனைத்து நார்களையும் கூடுமானவரை நீக்கிவிட வேண்டும். இப்போது, தடிமனான நூலை எடுத்து சிரட்டையின் அனைத்து பகுதிகளிலும் சுற்றி கட்டிக் கொள்ள வேண்டும்.
பின்னர், சிரட்டையில் கட்டியிருக்கும் நூலின் இடையே நமது இடது கையின் விரல்களை நுழைத்து காய்கறிகளை பிடித்துக் கொண்டு, வலது கையால் காய்கறிகளை வெட்டலாம். இப்படி செய்வதால் நம் கைகளில் காயம் ஏற்படுவதை தவிர்க்க முடியும். புதிதாக காய்கறிகள் வெட்டுபவர்களுக்கு இந்த டிப்ஸ் பயனுள்ளதாக இருக்கும்.
இதேபோல் மற்றுமொரு பயனுள்ள டிப்ஸை இப்போது பார்ப்போம். ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த தண்ணீரில், நாம் முகத்திற்கு பயன்படுத்தும் பௌடரை சிறிதளவு போட்டு கலக்க வேண்டும். இதையடுத்து, ஒரு சுத்தமான துணியை இந்த தண்ணீரில் முக்கி எடுத்து, கேஸ் ஸ்டவ், எண்ணெய் பிசுக்கு நிறைந்த டைல்ஸ்கள் ஆகியவற்றில் துடைக்கலாம். இதற்கு தனியாக சோப்பு வாங்கி பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை.