அரிசி, பருப்பில் வண்டு? 4 மிளகாய் போதும்... டப்பா பக்கத்தில் கூட வராது!
கிட்சன் பராமரிப்பில் நாம் அவசியம் பின்பற்ற வேண்டிய எளிமையான டிப்ஸ்கள் மற்றும் ட்ரிக்ஸ்களை இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம். இவற்றை பின்பற்றுவதற்கு சுலபமாக இருக்கும்.
நம் வீட்டை சீராக பராமரிப்பது என்பது சவாலான காரியம் என்றால், அதில் கிட்சனை சரியாக பராமரிப்பது கூடுதல் சவாலாக இருக்கும். ஆனால், சில எளிமையான வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் இந்த பணியை நம்மால் சுலபமாக மாற்ற முடியும். அந்த வகையில் பயனுள்ள சில கிட்சன் டிப்ஸ்களை காணலாம்.
Advertisment
சமையலில் பிரதான இடம் வகிப்பது உப்பு தான். அந்த வகையில் எல்லோரது வீட்டு கிச்சனிலும் உப்பு தவறாமல் இடம்பெற்று விடும். ஆனால், வாங்கிய சில நாட்களிலேயே உப்பு நீர்த்து போய் விடுவதால், அதன் சுவையில் மாறுபாடு தெரியும். இதனை ஒரு சிம்பிளான டிப்ஸ் மூலம் தடுக்க முடியும்.
அதன்படி, டப்பாவில் உப்பு போடுவதற்கு முன்னதாக கால் ஸ்பூன் கார்ன்ஃபிளவர் மாவை அதற்குள் போட்டு டப்பாவின் அனைத்து பகுதிகளிலும் படும் வரை கலக்க வேண்டும். இதன் பின்னர், ஒரு சிறிய துண்டு சிரட்டையை நன்றாக சீவி விட்டு அதே டப்பாவிற்குள் போட வேண்டும். இறுதியாக இந்த டப்பாவில் உப்பு போட்டு வைத்தால், அவை நீர்த்துப் போகாமல் இருக்கும்.
இதேபோல், வீட்டில் ஸ்டோர் செய்திருக்கும் அரிசி, பருப்புகளில் வண்டு வருவதே பெரும் தலைவலியாக இருக்கும். எத்தனை டப்பாக்களில் இதனை மாற்றி வைத்தாலும், தொடர்ச்சியாக வண்டுகளின் தொல்லை இருக்கத்தான் செய்யும். எனினும், மிளகாய்களைக் கொண்டு வண்டு பிரச்சனைக்கு தீர்வு காண முடியும்.
Advertisment
Advertisements
அரிசி, பருப்பு இருக்கும் டப்பாவில் 4 வரமிளகாய்களையும் சேர்த்து போட்டு வைக்க வேண்டும். இப்படி செய்தால் அதன் காரத்தன்மைக்கு வண்டுகள், பூச்சிகள் ஆகியவை வராமல் இருக்கும். இதேபோல், உளுந்தம் பருப்பு இருக்கும் டப்பாக்களில் வரமிளகாய்களுடன் சேர்த்து, சிறிதளவு மிளகாய்த் தூளும் போட்டு வைக்கலாம். இவை வண்டுகள் வருவதை தடுக்கும்.
சமையலுக்காக புளி வாங்கி வந்ததும் அவற்றை வெவ்வேறு அளவுகளில் உருண்டைகளாக உருட்டி ஒரு டப்பாவிற்குள் போட்டுக் கொள்ளலாம். சமையலின் போது நமக்கு தேவையான அளவு புளி எடுத்து உடனடியாக கரைப்பதற்கு இந்த டிப்ஸ் உதவியாக இருக்கும். மேலும், இந்த டப்பாவில் புளியை போட்ட பின்னர், அவற்றின் மீது சிறிதளவு கல் உப்பை தூவிக் கொள்ளலாம். இப்படி செய்தால் ஈரக்கையுடன் புளியை எடுத்தாலும் அவை கெட்டுப் போகாமல் இருக்கும். புளியில் வண்டு வருவதும் தடுக்கப்படும்.
இந்த சுலபமான கிட்சன் டிப்ஸை பின்பற்றுவதன் மூலம் வீட்டு பராமரிப்பில் நமது பணி மேம்படும்.