வீட்டை பராமரிப்பது என்பது சவாலான காரியம். குறிப்பாக, கிட்சனை சுத்தமாக வைத்திருப்பது என்பது மிகக் கடினமான ஒன்று. ஆனால், சில எளிமையான வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் நம் நேரத்தை மிச்சப்படுத்த முடியும். அவை என்னவென்று தற்போது நாம் காணலாம்.
நல்லெண்ணெய்யில் செக்கு வாடை சில நேரங்களில் இருக்கும். இதனை பயன்படுத்தும் போது வாடை இருந்தால் நம்மால் முழுமையாக உபயோகப்படுத்த முடியாத சூழல் உருவாகும். இப்படி வராமல் இருப்பதற்கு நல்லெண்ணெய் ஊற்றி வைத்திருக்கும் பாட்டிலில் சிறிய துண்டு வெல்லம் போட்டு வைக்கலாம். இவ்வாறு வைத்தால் செக்கு வாடை வராமல் இருக்கும்.
வீட்டில் பல்லி தொல்லையை கட்டுப்படுத்துவதற்கு எளிமையான முறையை பின்பற்றலாம். பச்சை மிளகாயை எடுத்து, அதன் மேற்புறத்தில் கீறிவிட வேண்டும். பின்னர், சிறிய பூண்டுகளை நன்றாக இடித்து, பச்சை மிளகாய்க்குள் வைக்க வேண்டும். இந்த மிளகாயை சிறிய பாத்திரத்தில் வைத்து, அதற்குள் தண்ணீர் தெளித்து பல்லி இருக்கு இடங்களில் வைத்து விடலாம். இப்படி செய்தால் வீட்டில் பல்லிகள் இருக்காது.
ரேஷன் கடைகளில் இருந்து வாங்கி வரும் அரிசி மற்றும் பருப்புகளில் அதிகமாக வண்டு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அப்படி வண்டு வராமல் தடுக்க சிறிய தேங்காய் சிரட்டை இருந்தாலே போதும். அரிசி மற்றும் பருப்பு வைத்திருக்கும் டப்பாவிற்குள் சிறிய துண்டு சிரட்டையை வைத்து விடலாம். இதன் மூலம் வண்டுகள் வருவதை எளிமையாக தடுக்க முடியும்.