வீட்டை பராமரிப்பது என்பது சவாலான காரியம். குறிப்பாக, கிட்சனை சுத்தமாக வைத்திருப்பது என்பது மிகக் கடினமான ஒன்று. ஆனால், சில எளிமையான வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் நம் நேரத்தை மிச்சப்படுத்த முடியும். அவை என்னவென்று தற்போது நாம் காணலாம்.
வெண்டைக்காய் போன்றவற்றை வாங்கி வந்த உடனேயே அவை ஃப்ரெஷ்ஷாக இருக்கும் போது சமைத்து விட்டால் நன்றாக இருக்கும். ஆனால், சில நாட்களில் அவை வாடிய பின்னர் பயன்படுத்த முடியாத சூழல் உருவாகும். இதனை தடுக்க சிம்பிள் டிப்ஸை பயன்படுத்தலாம். வெண்டைக்காயின் மேற்புறம் மற்றும் அடிப்பகுதியை வெட்டி எடுத்து விட வேண்டும். பின்னர், ஒரு வெள்ளை காட்டன் துணியில் சுற்றி வெண்டைக்காய்களை ஃப்ரிட்ஜில் வைத்து விடலாம். இப்படி செய்தால் வெண்டைக்காய்கள் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.
நம் வீட்டில் அடிக்கடி பயன்படுத்தும் இரும்பு கடாயில் எளிதாக துரு பிடித்து விடும். இதனை சுலபமாக நீக்க முடியும். அதன்படி, துரு பிடித்த இரும்பு கடாயில் ஒரு ஸ்பூன் கோலமாவு, சிறிது விம் லிக்யூட், ஒரு டீஸ்பூன் ஆப்ப சோடா சேர்த்து நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். இப்படி செய்தால் இரும்பு கடாயில் இருந்து துருக்களை அகற்றி விடலாம்.
இதேபோல், சமையலுக்கு பயன்படுத்தும் கறிவேப்பிலைகள் சீக்கிரம் வாடி போகாமல் இருப்பதற்கு ஒரு ட்ரிக் இருக்கிறது. பழைய கூல்ட்ரிங் பாட்டிலின் மேற்பகுதியை பாதியாக வெட்டி, அதற்குள் சிறிது தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும். இப்போது கறிவேப்பிலைகளை காம்பில் இருந்து எடுக்காமல், அப்படியே பாட்டிலில் போட்டு மூடி வைக்கலாம். இவ்வாறு செய்தால் கறிவேப்பிலை சீக்கிரம் வாடி போகாமல் இருக்கும்.