தற்போதைய சூழலில் பெரும்பாலானோர் வீடுகளில் கேஸ் அடுப்பு பயன்படுத்தப்படுகிறது. நகர் புறங்கள் மட்டுமின்றி கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் கூட கேஸ் அடுப்பையே பயன்படுத்த தொடங்கி விட்டனர். எளிதாக சமையல் செய்ய முடியும் என்பதே இதன் காரணம்.
அதன்படி, கேஸ் அடுப்பும் சீராக அதன் வேலையை பார்க்க வேண்டும் என்றால் அதனை சரியான கால இடைவெளியில் சுத்தப்படுத்த வேண்டும். அடுப்பின் மேற்புறத்தை சுத்தப்படுத்துவது மட்டும் போதாது. அடுப்பின் அடிப்பகுதி பர்னரையும் சுத்தப்படுத்தினால் மட்டுமே நெருப்பு நன்றாக எரியும். இதனை கடைகளில் சர்வீஸ் கொடுத்தும் சுத்தம் செய்யலாம். ஆனால், ஒரு ஸ்டவ் பின் இருந்தால் வீட்டிலேயே இந்த வேலையை நாம் சுலபமாக செய்து முடிக்க முடியும்.
இதற்கு முதலில் சிலிண்டரை ஆஃப் செய்து விட வேண்டும். அதன்பின்னர், அடுப்பின் மேற்புறத்தில் உள்ள பாகங்களை தனியாக கழற்றி எடுக்க வேண்டும். இதைத் தொடர்ந்து, அடுப்பை தலைகீழாக கவிழ்த்து அடிப்பகுதியில் பர்னர் மாட்டியிருக்கும் நட்டுகள் மற்றும் போல்டுகளை கட்டிங் பிளேடு கொண்டு கழற்றி எடுக்க வேண்டும்.
இதை கழற்றிய பின்னர், பர்னர் மாட்டப்பட்டிருந்த இடத்தில் ஸ்டவ் பின் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். ஸ்டவ் பின்னின் மெலிதான ஊசிப் பகுதியை கொண்டு துல்லியமாக சுத்தம் செய்தாலே போதுமானது. இவ்வாறு செய்வதால் அதில் இருக்கும் அடைப்புகளை நீக்க முடியும். உதாரணத்திற்கு 4 பர்னர் கொண்ட அடுப்புகள் என்றால் நான்கு பகுதிகளிலும் சுத்தம் செய்ய வேண்டும். அதன் பின்னர் அனைத்து பாகங்களையும் அதே இடத்தில் மாட்டிவிட்டால் போதும்.
இப்போது நீங்கள் அடுப்பை ஆன் செய்து பற்ற வைத்தால் முன்னர் இருந்ததை விட நன்றாக நெருப்பு எரியும். இதனால் உங்கள் சமையலும் விரைவாக முடியும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“