கேஸ் அடுப்பின் பர்னரை எப்படி சுத்தம் செய்யலாம் என தற்போது பார்க்கலாம். பர்னரை நன்றாக சுத்தப்படுத்தி பயன்படுத்தினால், கேஸ் மிச்சமாகும். இதன் மூலம் நம் பணத்தையும் சேமிக்க முடியும்.
முதலில் ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்து, அதில் பர்னரை வைக்க வேண்டும். இந்த பாத்திரத்திற்குள் இருக்கும் பர்னர்கள் மூழ்கும் அளவிற்கும் கொதிக்கும் பதத்தில் இருக்கும் சுடுதண்ணீர் ஊற்ற வேண்டும். இப்படி ஊற்றுவதன் மூலம், பர்னரில் இருக்கும் அழுக்குகள் தனியாக பிரிந்து வருவதை பார்க்கலாம். மேலும், இந்த சுடுதண்ணீருடன் எலுமிச்சை சாறு மற்றும் ஈனோ பௌடர் சேர்க்க வேண்டும்.
பர்னரை இந்த சுடுதண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். அடுத்த நாள் காலை பார்க்கும் போது பர்னர் ஓரளவிற்கு சுத்தமாகி இருக்கும். அடுத்ததாக, இதில் வினிகர் சிறிது அளவு சேர்த்து மேலும் ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இப்படி செய்ததன் மூலம் அதிகப்படியான அழுக்குகள் பர்னரில் இருந்து நீங்கி இருக்கும்.
தற்போது, சாதாரண பாத்திரம் கழுவ பயன்படும், சோப் கொண்டு பர்னரை தேய்த்து கழுவலாம். இத்துடன், சிறிது அளவு புளியும் சேர்த்து துடைக்க வேண்டும். இவ்வாறு தேய்த்து கழுவினால் பர்னர் புதிது போன்று மாறி விடும். இதையடுத்து, பர்னரின் துவாரங்களில், ஊசி கொண்டு சுத்தம் செய்தால் அழுக்குகள் அனைத்தும் முற்றிலும் நீங்கிவிடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“