தோட்டத்தை பராமரிப்பது என்பதே சவாலான காரியம் தான். அதற்காக நேரம் செலவிட்டு, நல்ல முறையில் செடிகளை பாதுகாக்க வேண்டும். குறிப்பாக, மழைக்காலங்களில் இதன் வேலை இரண்டு மடங்காக இருக்கும். அந்த சமயத்தில் நிறைய பூச்சிகள் தோட்டத்தில் காணப்படும்.
இந்த பூச்சிகளால் செடிகள் பெருமளவு பாதிக்கப்படும். இதற்காக இரசாயனம் கலந்த பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்தினால் மண்ணின் வளமும், செடியின் தன்மையும் பாதிக்கப்படும். இதனால், வீட்டில் இருக்கும் இரண்டு பொருள்களைக் கொண்டே இயற்கையான முறையில் பூச்சிகளை எப்படி கட்டுப்படுத்துவது என்று பார்க்கலாம்.
இதற்காக 10 பட்டைகள் மற்றும் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் எடுத்துக் கொள்ளலாம். முதலில் ஒரு லிட்டர் தண்ணீரை அடுப்பில் வைத்து அதற்குள் பட்டைகளை போட வேண்டும். இந்த தண்ணீர் அரை லிட்டராக வற்றும் வரை கொதிக்க விட வேண்டும். அதன் பின்னர், மஞ்சள் தூள் போட்டு நன்றாக கலக்க வேண்டும். இந்த நீர், ஆறியதும் நன்றாக வடிகட்டி எடுத்து விட்டு பூச்சிகள் இருக்கும் இடங்களில் தெளிக்கலாம்.
இந்த நீர் செடிகளுக்கு உரமாகவும் பயன்படும். எனவே, செடிகளுக்கு இதை ஊற்றினாலும் பாதிப்பு ஏற்படாது. இரசாயனத்திற்கு மாற்றான இந்த பூச்சிகொல்லியை நாமே உருவாக்க முடியும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“