வெயில் காலத்தில் நாம் சமைக்கும் சாதம் விரைவாக கெட்டுப் போகும் தன்மை கொண்டதாக இருக்கும். சிலர் அதிகாலை 4 மணிக்கு சாதம் வடித்து மதிய உணவாக எடுத்துச் செல்லும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். அப்போது, சில சமயங்களில் சாதம் கெட்டுப்போவதற்கான வாய்ப்பு உள்ளது.
இதை தடுப்பதற்காக பலர் குக்கரில் சாதம் செய்யும் முறையை மேற்கொள்வார்கள். இனி அப்படி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. வடித்த சாதம் நாள் முழுவதும் கெட்டுப்போகாமல் இருப்பதற்கான வழிமுறைகள் குறித்து தற்போது காணலாம்.
முதலில் சாதம் உதிரியாக வருவதற்கான டிப்ஸை பார்க்கலாம். அரிசி நன்றாக வெந்து வரும் நேரத்தில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை சாதத்தில் ஊற்றலாம். இப்படி செய்வதால் சாதம் உதிரியாக வரும். தேங்காய் எண்ணெய்யின் வாசனையும் சாதத்தில் இருக்காது.
இப்போது வெந்த சாதத்தை வடித்து விடலாம். வடித்த சாதத்தை அதே பாத்திரத்தில் வைத்திருக்க கூடாது. அப்படி செய்தால் சாதம் சீக்கிரமாக கெட்டுப்போகும். இதற்காக அகலமான ஒரு பாத்திரம் அல்லது ஹாட்பாக்ஸ் எடுத்துக் கொள்ளலாம். அதற்குள் ஒரு சுத்தமான வெள்ளைத் துணியை விரித்து வைக்க வேண்டும்.
இதையடுத்து, வடித்த சாதத்தை அந்த வெள்ளைத் துணியில் போட வேண்டும். பின்னர், துணியுடன் சேர்த்து சாதத்தை மூடி வைக்கலாம். இப்படி செய்வதன் மூலம் ஒரு நாள் முழுவதும் சாதம் கெட்டுப்போகாமல் இருக்கும்.