இன்றைய இளம் தலைமுறையினருக்கு பெரும் கவலையாக இருப்பது முடி உதிர்வு தான். இவை அழகு சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. முடி உதிர்வு ஆரோக்கியம் தொடர்புடையதும் கூட. எனவே, முடி உதிர்வு பிரச்சனைகளை அவ்வளவு எளிதாக கடந்து செல்லக் கூடாது. இந்தப் பதிவில் முடி உதிர்வு பிரச்சனைகளை சரி செய்ய 5 டிப்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றைக் காணலாம்.
குளிப்பதற்கு சிலர் சுடுதண்ணீரை பயன்படுத்துவார்கள். குறிப்பாக, குளிர் காலங்களில் பெரும்பாலானோர் சுடுதண்ணீரில் குளிப்பார்கள். ஆனால், இவ்வாறு செய்யக் கூடாது என வல்லுநர்கள் கூறுகின்றனர். இவை சில நேரங்களில் வறட்சி தன்மையை ஏற்படுத்தும் என்பதால், தண்ணீரிலேயே குளிக்க வேண்டுமென கூறப்படுகிறது.
ஷாம்பு, ஹேர் சீரம் என எத்தனையோ பொருள்களை பயன்படுத்தினாலும், உணவில் இருந்து நமக்கு கிடைக்கும் சத்துக்கு ஈடாகாது. புரதச் சத்து மிகுந்த உணவுகளை அன்றாடம் சாப்பிட வேண்டும். முட்டை, மீன், கீரைகள் ஆகியவற்றை சாப்பிடலாம். கீரைகளில் புரதம் மற்றும் மினரல்கள் நிறைந்துள்ளது. இவை முடி வளர்ச்சியை தூண்டுவதுடன், உடலுக்கும் ஆரோக்கியத்தை வழங்ககூடியவை.
கட்டாயம் நம் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். ஒரு நபர் சராசரியாக நாள் ஒன்றுக்கு மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடிக்கலாம் எனக் கூறப்படுகிறது. இது நம் உடலில் நீர்ச்சத்து நிலைத்திருக்க செய்யக் கூடியது. பெரும்பாலும் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு தண்ணீர் தாகம் எடுக்காது. ஆனால், அவர்களும் கட்டாயம் தண்ணீர் அருந்த வேண்டும்.
தலைக்கு ஹேர்மாஸ்க் போட்டு குளிக்கலாம். உதாரணமாக துளசி, வேப்பிலை, வெந்தயம், முட்டையின் வெள்ளைக் கரு, தயிர் போன்றவற்றைக் கொண்டு ஹேர்மாஸ்கை நாமே செய்யலாம். இவ்வாறு செய்வதன் மூலம் இரசாயனம் கலந்த பொருள்களை கடைகளில் இருந்து வாங்குவதை தடுக்க முடியும்.
நம் கைகளைக் கொண்டே காலை நேரத்தில் சுமார் 5 நிமிடங்கள் தலைக்கு மசாஜ் செய்யலாம். இவை முடி வளர்ச்சியை தூண்டுவதுடன், அவற்றை அடர்த்தியாக வளர வைக்க ஊக்குவிக்கும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“