வீட்டில் உள்ள அனைவருக்கும் பெரும்பாலும் சப்பாத்தி, பூரி போன்றவை பிடித்தமான உணவாக இருக்கும். ஆனால், இதற்கு மாவு பிசைவது தான் சவாலான பணி. அந்த வகையில் மிக எளிமையாக சப்பாத்தி மாவு எப்படி பிசைவது என தற்போது காணலாம்.
சிறிய பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் அளவிற்கு தயிர் எடுத்துக் கொள்ளலாம். தயிர் அதிகம் புளிப்பு ஏறாமல் ஃப்ரெஷ்ஷாக இருத்தல் அவசியம். இந்த தயிரை பாத்திரத்தில் நன்றாக தேய்த்து கிரீம் பதத்திற்கு கொண்டு வர வேண்டும்.
இதையடுத்து, அதே பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் அளவிற்கு கடலை எண்ணெய் சேர்க்க வேண்டும். இப்போது, தயிர் மற்றும் கடலை எண்ணெய் இரண்டையும் ஒன்றாக கலக்க வேண்டும்.
அதன் பின்னர், அரை கப் அளவிற்கு தண்ணீரை இதே பாத்திரத்தில் ஊற்ற வேண்டும். இதனுடன் சிறிது உப்பு கலக்க வேண்டும். இறுதியாக ஒரு கப் கோதுமை மாவை எடுத்து, முதலில் தயாரித்து வைத்திருந்த கலவையுடன் சேர்க்க வேண்டும்.
இப்படி செய்தால் சப்பாத்தி மாவை மிக சுலபமாக பிசைந்து எடுத்துக் கொள்ளலாம். நமது நேரமும் அதிகளவு மிச்சமாகும். முதலில் மாவை போட்டு அத்துடன் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பிசைந்தால், மொத்த மாவையும் பிசைந்து முடிக்க அதிக நேரமாவதுடன் கைகளிலும் வலி எடுக்கும்.
எனவே, இந்த எளிமையான முறையை பின்பற்றி நம் வீடுகளில் சுலபமாக சப்பாத்தி மாவு பிசைந்து கொள்ளலாம். மேலும், தயிர் சேர்த்திருப்பதால் சப்பாத்தி மாவும் மிருதுவாக இருக்கும். இதனை நீண்ட நேரம் ஊற வைக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.