குறைந்த உடலியக்கம், ஜங்க் உணவுகளை அதிகம் சாப்பிடுவது மற்றும் தாமதமாக தூங்குவது போன்ற பல காரணங்களால் குழந்தைக்கு மலச்சிக்கல் பிரச்சனை வரலாம்.
குழந்தைகளிடையே காணப்படும் பொதுவான நோய்களில் இதுவும் ஒன்று. அதற்காக நாம் குழந்தைகளை குறைகூற முடியாது. ஏனெனில் இது அவர்களின் தவறு கிடையாது. மாறிப்போன நம் வாழ்க்கைமுறை தான் இதற்கு காரணம். இப்போதுள்ள குழந்தைகள் இயற்கையோட ஓட்டாமல், சேற்றில் அழுக்காகி விளையாடுவதை விட, வீட்டுக்குள் விளையாடி, ஒளிரும் திரைகளை பார்ப்பதைத் தான் அதிகம் விரும்புகின்றன.
இப்படி இருக்க கொரோனா அச்சம் காரணமாக, வெளியில் சென்று விளையாடுவதற்கும் தற்போது அதிக கட்டுப்பாடுகள் எழுந்துள்ளதாக மருத்துவர் திக்ஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளார்.
குழந்தைகள் போதுமான நீரை உட்கொள்ளாதது, நீரிழப்புக்கு வழிவகுக்கும். அவர்களின் உணவுமுறையில் போதுமான திரவங்கள் இல்லாமல் இருப்பது, மோசமான குடல் ஆரோக்கியம் போன்றவையும் இதற்கு காரணம். சில நேரங்களில் மலம் கழிக்கும்போது மலம் கடினமாக வருவதுடன், ஆசன வாயில் அதிக வலி ஏற்படுவதால் மூலநோய் வரவும் வாய்ப்புள்ளது.
உங்கள் பிள்ளைக்கு வழக்கமான குடல் அசைவுகள் இல்லையென்றால் நீங்கள் என்ன செய்யலாம்? கவலை வேண்டாம், இதோ ஆயுர்வேதத்தில் இருந்து சில குறிப்புகள்!
இந்த சிக்கலை எதிர்த்துப் போராட உதவும் சில வழிகளை ஆயுர்வேத மருத்துவர் இங்கு பரிந்துரைத்துள்ளார்.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீரை அவர்களுக்குக் கொடுக்கத் தொடங்குங்கள்.
தினமும் காலையில் தண்ணீரில் ஊறவைத்த 4 அல்லது 5 உலர்ந்த திராட்சைகளை முதலில் கொடுங்கள்.
இரவில் தூங்கும் போது ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான பாலுடன், அரை டீஸ்பூன் நெய் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கவும்.
வாயு சம்பந்தமான பிரச்சனைகளை போக்க தினமும் இரவில், குழந்தைகளின் வயிற்றில் காயத்தை தடவி விடுங்கள். கடிகார திசையில் தடவுவதால் சிறந்த பலன் கிடைக்கும்.
பச்சை உணவுகளை தவிர்த்து, நன்றாக வேகவைத்த அல்லது சமைத்த உணவை தொடர்ந்து கொடுங்கள்.
சர்க்கரையின் அளவு, ஜங்க் மற்றும் திண்பண்டங்களின் அளவைக் குறைத்து சூடாக புதிதாக சமைத்த உணவுகளை கொடுங்கள்.
நடைப்பயிற்சி மற்றும் ஓடுதலை உள்ளடக்கிய விளையாட்டுகளில் ஈடுபடுவதன் மூலம், குழந்தைகள் போதுமான அளவு உடலியக்கத்தோடு இருப்பதை உறுதிப்படுத்துங்கள்.
சாதரண மலச்சிக்கலுக்கு இந்த வழிமுறைகளை பின்பற்றினாலே போதுமானது. ஆனால் இது தொடர்ந்து நீடித்தால், ஆயுர்வேத மருத்துவரை அணுகி, நோய் குறித்து விரிவாக விவாதித்து பிரச்சனக்கான மூலகாரணத்தை கண்டறியவும் மற்றும் சிரப் மற்றும் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதற்கு பதிலாக ஆயுர்வேத மூலிகைகள் மற்றும் மருந்துகளை தேர்வு செய்வது சிறந்த பலனை தரும் என மருத்துவர் திக்ஷா தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil