நல்லெண்ணெய்க்கு மூலப்பொருளான எள்ளு, ஒரு சத்து மிகுந்த தானியம். அதை பொடியாக, துவையலாக நம் முன்னோர்கள் அதிகம் உணவில் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். குறிப்பாக திருநெல்வேலிக்காரர்கள் எள்ளு உணவை அதிகம் விரும்புவார்கள்.
ஹோட்டல்களிலும் சாதத்திற்கு முன்பு, கொஞ்சூண்டு எள்ளு சாதம் வைக்கும் நடைமுறை இருக்கிறது. இந்த எள்ளு சாதத்தை எப்படி சுவையாக தயார் செய்வது என இங்கு காணலாம்.
எள்ளு சாதம்
எள்ளு சாதம் செய்யத் தேவையான பொருள்கள் : பச்சரிசி - 1 கப், கருப்பு எள் - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 6, உப்பு - தேவையான அளவு
தாளிக்க: நல்லெண்ணெய், கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு, நிலக்கடலை, பெருங்காயம், கருவேப்பிலை.
எள்ளு சாதம் செய்முறை :
பச்சரிசியை உதிரியாக வேக வைத்து ஆற வைத்து கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய் விடாமல் எள்ளை வறுக்கவும். படபடவென பொரியும் போது எடுத்து வைக்கவும். அடுத்து அதே வாணலியில் எண்ணெய் 1 டீ ஸ்பூன் விட்டு மிளகாயை வறுங்கள். பிறகு அதனுடன் எள், உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.
மற்றொரு வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு, நிலக்கடலை, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். அதில் உதிரியாக வடித்த சாதத்தை கொட்டி, தேவையான உப்பு, எள் பொடியைத் தூவிக் கலந்து விடுங்கள். இப்போது சுவையான எள்ளு சாதம் ரெடி.
எள்ளு சாதம் சத்தானது மட்டுமல்ல, சுவையானதும்கூட. இந்த டேஸ்ட் ஒருமுறை பிடித்துவிட்டால், அப்புறம் விடமாட்டீங்க!
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil